கூட்டம் - குறுங்கட்டுரை

 

கூட்டம்


உங்களுக்கு தெரிந்த அளவில் கூட்டம் என்றவுடன் எந்தெந்த இடங்களெல்லாம் நினைவுக்கு வரும்..?


1)சந்தை, நியாயவிலைக்கடை, பல்பொருள் அங்காடி, பேருந்து நிலையம், கோயில்...

2)பள்ளிக்கூடம், கல்லூரி, திரையரங்கம், ஆன்மிக சொற்பொழிவு...


ஏன் இரண்டாக பிரித்து எழுதியிருக்கிறேன்? முதலாவதாக இருப்பது தனிமனித மனம் இயங்கிக்கொண்டிருக்கும் இடங்கள். அங்கு எல்லோருக்கும் பொருந்தும் ஒரு பொதுவிடயத்தை அவர்கள் மத்தியில் சொல்ல முடியாது. ஆனால், இரண்டாவதாக உள்ள இடங்களில் எல்லோருக்குமான ஒரு பொதுவிடயத்தை உங்களால் பேசமுடியும். 


பள்ளி - கல்லூரியில், ஒரு ஆசிரியர் பேசுவார், 60 மாணவர்கள் கேட்பார்கள். இங்கு தலைமை, ஆசிரியர். திரையரங்கின் திரையில் ஒரு இயக்குனரின் சிந்தனை நடிகரின் வழி பேசும், 500 பேர் அமைதியாக பார்த்தும் கேட்டும் இரசிப்பர். இங்கு தலைமை, நடிகர். ஆன்மிக சொற்பொழிவும் அப்படித்தான். இங்கு தலைமை, ஆன்மிகவாதி. 


ஒரு அரசியல்வாதிக்கு இப்படியான கூட்டமே தேவை. அதுதான் அவர்களின் மூலதனம். சிலநேரங்களில் அவர்களுக்காகவே கூடும் கூட்டத்தை பயன்படுத்துவர். இன்னும் தேவைப்படும்போது இரண்டாவதாக சொல்லப்பட்ட இடங்களின் தலைவர்களை அதாவது, ஆசிரியரையோ, நடிகரையோ, ஆன்மிகவாதியையோ தனக்கானவர்களாக மாற்றிக்கொள்வார்கள்.


மொழிப்போரில் ஏன் அதிக இளைஞர்கள் ஈடுபட்டார்கள் என்று புரிகிறதா? ஏன் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்பது புரிகிறதா? அல்லது ஏன் ஒரு கட்சியில் நட்சத்திர பேச்சாளர் நடிகராக உள்ளனர் என்பது புரிகிறதா? ஆனால், அந்த கூட்டம் அப்படியே வாக்காகும் என்றும் சொல்லமுடியாது ; ஆகாது என்றும் சொல்லமுடியாது. இரண்டுக்கும் காலத்தில் உதாரணங்கள் உண்டு. 


ஏன் அரசியல்வாதிகள் மதத்தலைவர்களை தேர்தல் நேரத்தில் சந்திக்கிறார்கள் என்றும் இப்போது புரியும் என நினைக்கிறேன். இது ஒரு கொடுக்கல் - வாங்கல் முறைதான். எனக்கு ஒரு கூட்டம் இருக்கிறது. நான் சொன்னால் அதில் பெரும்பகுதி கேட்பார்கள். பதிலுக்கு எனக்கு என்ன தருவாய்..? இப்படி ஒரு பெருங்கூட்டத்தை தனக்கு வைத்திருப்பவர்களே எல்லா மதத்திலுமிருக்கும் சாமியார்கள். இவர்களே corporate சாமியார்கள். இவர்களின் பாதை ஆன்மிகமாகவும் இருக்காது, அரசியலாகவுமிருக்காது. இரண்டுமற்ற குழப்பத்தில் மக்களை வைத்திருக்கும். 


நேரடியாக இவர்கள் எந்த அசைவுகளையும் வெளிக்காட்டமாட்டார்கள். ஆனால், அரசுக்கும் இவர்களுக்கும் மிகுந்த இணக்கமிருக்கும். இவர்களின் விழாகளுக்கு அரசியல்வாதிகள் வருவதன் வழியாக அந்த கூட்டத்தை அரசியல்வாதிகள் பயன்படுத்துவார்கள். பதிலுக்கு இந்த மதபோதகர்களின் சில நடவடிக்கைகளுக்கும், திட்டங்களுக்கும் அரசியல்வாதிகள் இடையூறு செய்யாமல் ஆதரவோடு உதவியும் செய்வார்கள்.


இதெல்லாம் மக்களின் உளவியலோடு ஆடும் ஆட்டமென்பதால் அவர்களுக்கு எதுவும் தெரியாது. கூட்டத்தை பயன்படுத்தத்தெரிந்தவன் வியாபாரி. அவன் ஆன்மிகவாதியோ அரசியல்வாதியோ இல்லை.


- பரிதி


❤️

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை? - பரிதி

யட்சி - யட்சன்

கவிதை - அன்பு என்பது... - பரிதி