Disconnect (சிறுகதை) - பரிதி
Disconnect (சிறுகதை)
ஒரு திருமணத்தரகரிடம் அப்பா பேசிக்கொண்டிருக்கிறார், "என் பொண்ணுக்கு ஒரு நல்ல பையனா பாருங்க தரகரே. ஒரே பொண்ணு, ரொம்ப செல்லமா வளர்த்துட்டேன். அவள கண்கலங்காம, ரொம்ப நல்லா பாத்துக்குற பையனா பாருங்க"
"அதுக்கென்னங்க நல்ல பையனா, உங்க பொண்ண நல்லா பாத்துக்குற பையனாவே பாத்துடுவோம்" என்றார் தரகர்.
உள்ளே சமையலறையில் நின்றுகொண்டிருந்த மகிஷா அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தாள். ஒரு மாதத்திற்குமுன் பிரபுவிடம் ஏற்பட்ட சண்டை, பிரிவால் கொஞ்சம் யோசனையாகவே இருந்தாள்.
(அவளது அலைபேசி ஒலித்தது...)
அழைப்பது தன் தோழி சத்யாவாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் வந்தது. திரையைப்பார்த்தாள் அவளேதான். அழைப்பை ஏற்று மிகுந்த சலிப்போடு "என்ன..." என்றாள்.
"ஏய்... பிரபு எப்பவும்போல எனக்கு கூப்பிட்டே இருக்கான்டி. உங்கிட்ட பேசனும் பேசனும்னு ரொம்ப கெஞ்சுறான்டி. இங்கபாரு மகிஷா... ஒன்னு ஏன் அவன வேண்டாம்னு சொல்றன்னு அவன்கிட்ட சொல்லு. இல்லாட்டி எங்கிட்டியாவது சொல்லு. எதுவுமே இல்லாம ஏன்டி இத்தன திமிரு பண்ற..." என்றாள் சத்யா கொஞ்சம் கோவமும் சலிப்புமாக.
பதிலெதுவும் பேசாமல் அழைப்பை துண்டித்துவிட்டாள் மகிஷா. சத்யாவுக்கோ மிகுந்த ஆத்திரம். கிளம்பி மகிஷா வீட்டுக்கே வந்துவிட்டாள். வீட்டுக்குள் வந்தவள் மகிஷாவை பார்த்தவுடன் "உனக்கு என்னடி பிரச்சன..?" என்று கத்தத்தொடங்கிவிட்டாள். அவளை ஆற்றுப்படுத்தி அமர்த்தினாள் மகிஷா. ஆனாலும் சத்யா கடுகடுத்த முகத்தோடே இருந்தாள்.
சிறுதுநேரம் இருவரும் அமைதியாக இருந்தனர். பின் சத்யா, "அவனுக்கு என்னடி, அவன் நல்ல பையன். எங்களுக்கே நல்லா தெரியும் உன்னைய அவன் நல்லா பாத்துப்பான். அப்புறம் ஏன்டி அவன இப்படி சாகடிக்கிற. எனக்கே பாவமா இருக்கு அவன நெனச்சா" என்றாள்.
"..." மகிஷாவிடம் எந்த அசைவும் இல்லை.
"இப்ப ஏதாவது பேசப்போறியா இல்லையா மகி"
" ஏய்... அவன் எம்மேல over caringங்கா இருக்கான்டி" என்றாள் மகிஷா மிகுந்த சலிப்போடு.
சத்யாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கையில் காபியோடு அவர்கள் இருக்கும் அறைக்கதவைத்தட்டினார் மகிஷாவின் அப்பா. பேச்சை நிறுத்திக்கொண்டு கதவைத்திறந்தாள் சத்யா.
" என்னம்மா சத்யா காலைலதான் தரகர் வந்தாரு. நம்ம மகிஷாவுக்கு நல்ல வரன் ஒன்னு பாக்க சொல்லியிருக்கேன். நல்ல தரகர்ம்மா. உனக்கும்கூட பார்க்க சொல்லட்டுமா" என்றவருக்கு "சரிங்ப்பா நான் என்னோட ஜாதகத்த கொண்டுவரேன்" என்றாள் சத்யா. காபியைக்கொடுத்துவிட்டு கிளம்பினார் அவர்.
"சரிடி, எனக்கு இப்ப ஒரே ஒரு கேள்விதான் இருக்கு. நாளைக்கு அப்பா உனக்கு பாக்கப்போற பையனும் இதேமாதிரி அதீத அக்கறைய காட்டுறவனா இருந்தா என்ன பண்ணுவ..?" என்றாள் சத்யா. அமைதியாகவே இருந்தாள் மகிஷா.
"பிரபு உனக்கு தாலிகட்டுல அதனால இப்ப ரெண்டு வருஷம் கழிச்சு அவன் சலிப்பாகுறமாதிரி இருந்தவுடனே வேண்டாம்னு சொல்லிட்ட. இதே அவன் தாலி கட்டியிருந்தா என்னடி பண்ணியிருப்ப..?" என்றாள் சத்யா.
"இங்கபாரு சத்யா நீ கேட்ட ரெண்டு கேள்விக்கும் ஒரே பதில்தான். அதான் தலையெழுத்துன்னு இருந்துடுவேன்." என்றாள் மகிஷா கோவமாக.
"அதெப்படி...டி காலம்முழுக்க இப்படி ஒரு சலிப்போட குடும்பம் நடத்துவ. சரி, அப்படின்னா அப்பாவ இப்ப கூப்பிடு. கூப்பிட்டு, அப்பா... எனக்கு ஒரு தெருப்பொறுக்கி மாதிரியோ, ஒரு ஊதாரி மாதிரியோ இருக்குறவறனா பாருங்க. நீங்க கேக்குற மாதிரி என்னைய கண்கலங்காம, ரொம்ப நல்லா பாத்துக்குற பையனா பாக்காதிங்கன்னு சொல்லிட வேண்டியதுதான..?" என்றாள் சத்யா மிகுந்த கோவமானவளாக.
பதில்பேசமுடியாதவளாகவும், அதேசமயம் இறுமாப்பு குறையாதவளாகவும் தன் முகத்தை வைத்திருந்தாள் மகிஷா. சத்யாவுக்கு மீண்டும் பிரபுவிடமிருந்து அழைப்பு வந்தது. மகிஷாவிடம் திரையைக்காட்டியபடி சத்யா கேட்டாள் "என்னடி இப்ப attend பண்ணவா? Cut பண்ணவா?" என்று.
"Cut பண்ணிடு" என்றபடி எழுந்து சென்றாள் மகிஷா.
💔
ஒரு ஆணுக்கு, தன் மனைவிக்கு தானொரு இரண்டாம்நிலை ஆள்தான் என்பதைவிடவும் உலகில் மிகப்பெரிய அவமானமோ, தாழ்வுநிலையோ இருக்கப்போவதில்லை. அப்படியான நிலை ஒரு ஆணை உளவியலாக ஒன்றுமில்லாமல் ஆக்கும் ஒன்று.
முன்பெல்லாம் "காதல் திருமணம்" என்பதில் காதல் என்பது முதல்நிலையாகவும் திருமணம் என்பது அதன் அடுத்த நிலையாகவும் இருந்தது. இப்போது காதல் என்பது வேறாகவும் திருமணம் என்பது வேறாகவும் இருப்பது மனதின் சிதைவைத்தான் குறிக்கிறதேயன்றி வேறில்லை.
"அன்பில் வரையறைகளை வகுத்தால் நடிக்கலாம், வாழமுடியாது" என்பார் அண்ணன் ஒருவர்.
- பரிதி
❤️
அன்பும் அக்கறையும் கிட்டத்தட்ட ஒன்று தான்.
பதிலளிநீக்கு