Before sunrise - திரைப்பட அறிமுகம் - பரிதி
Before sunrise(1995) - 101minutes/romantic drama
IMDb - 8.1/10, Rotten Tomatoes - 100%
Castle Rock Entertainmentன் மற்றொரு ஆகச்சிறந்த படைப்பு.
இப்போதுதான் இந்த படத்தை பார்த்தேன். இதற்கு முன்புவரை நான் பார்த்த படங்களிலேயே சிறந்த romantic movie என்றால் '2 States' திரைப்படத்தைத்தான் மனதில் வைத்திருந்தேன். ஆனால் இந்த படம் அதை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டது.
சுருக்கமாக சொல்வதானால், வழிப்போர்கர்களின் காதல். ஒரே ஒரு நாள் தான் கிடைக்கும் என்றாலும், அதில் ஒரு நொடியைக்கூட வீணடிக்காமல் வாழ்ந்து முடிக்கும் காதலர்கள் பற்றித்தான் கதை. இருவர் வாழ்வில் ஒருநாள் எப்படி கழிந்தது, இவ்வளவு தான் கதை.
படம் முழுக்க நான் மிக ரசித்தது Celine என்ற கதாபாத்திரத்தைத்தான். அவளின் கண்ணசைவு, உதட்டசைவுகளில் இருக்கும் எதுவுமற்ற வெளிப்பாடு, ஏதோவொரு உண்மை என்று நடிப்பென எடுத்துக்கொள்ளமுடியாதபடிக்கான தோற்றம். இந்த அளவு நான் இதற்குமுன் இரசித்த நடிகை ஒரே ஒருத்திதான். அவள் Eva green. இருவருமே french actress.
சரி... கதைக்கு வருவோம்...
ஒரு இரயிலில் கதை தொடங்குகிறது. மனம் பொருந்தாத ஒரு இணையின் சண்டையோடு. அதை கேட்கச்சகிக்காமல் ஒரு பெண் இடம்மாறி பின்னே உள்ள இருக்கைக்கு போய்விடுகிறாள். அங்கே பக்கத்தில் உள்ள இருக்கையில் ஒரு சமவயதையொத்த ஒருவன் இருக்கிறான் (வேறயாரு கதாநாயகன் தான்).
"சண்டைபோட்டுக்கொண்ட இணை Germanல் பேசிக்கொண்டார்களே உங்களுக்கு ஏதும் தெரிகிறதா, அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று" என கதாநாயகன் கேட்பதில் துவங்குகிறது இருவருக்குமான உரையாடல். அதன்பிறகு "இப்ப என்ன புத்தகம் படிக்கிறிங்க" என்று இவன் கேட்க அவள் Georges Batailleன் ஒரு புத்தகத்தை காட்டுவாள். பதிலுக்கு இவள் கேட்பாள் "நீங்கள் என்ன படிக்கிறீர்கள்" என்று. அவன் Klaus Kinskiன் All I Need Is Love புத்தகத்தை காட்டுவான். அப்போது அவள் ஒரு மெல்லிய சிரிப்போடும் வெட்கத்தோடும் கீழே குணிவாள்.
இரயிலில் இருக்கும் உணவகத்திற்கு போவார்கள். அங்கு அமெரிக்கர்களிடம் இருக்கும் மொழியரசியலை கொஞ்சம் பேசியிருப்பார் இயக்குனர். இவனுக்கு அவளழகில் ஒரு மயக்கமிருப்பதும் அவள் ஏதுமின்றி இருப்பது போலும் அந்த உரையாடல் தொடரும். "நீ எங்க போற" என்பதற்கு அவள் "Parisக்கு படிக்க" என்பாள். "நீ..?" என்றதற்கு அவன் "Vienna" என்பான். "அங்கு என்ன..?" என்றதற்கு "தெரியல சும்மா விடுமுறையை கழிக்க" என்பான். "ஓ... நீ விடுமுறையில் இருக்கியா" என்றதற்கு "ம்... அப்படின்னு சொல்ல முடியாது. நான் அப்படியே சும்மா பயணிக்கிறவன். இப்ப ரெண்டு மூனுவாரமா இப்படித்தான் இரயில்ல சுத்திட்டு இருக்கேன்" என்பான். அப்புறம் பேச்சின் இடையில் "சும்மா இரசிக்க என்ன இருக்குன்னு" அவளிடமிருந்து வரும்போது "எங்கிட்ட ஒரு யோசனை இருக்கு கேக்க நீ தயாரா" என்பான்.
"மக்களின் 24 மணிநேரம் எப்படி இருக்குன்னு பாக்கனும் ஒரு TV showக்காக. உலகம் முழுக்க இருந்து 365 மக்கள தேர்ந்தெடுத்து அத படமாக்கனும்" என்று சொல்வான். அதற்கு அவள் "இது எவ்வளவு boreரான விஷயம் தெரியுமா, இதிலெல்லாம் என்ன இருக்கிறது. Everybody has to do every day of their fucking life?" என்பாள். (ஆத்தி என்ன ஒரு பொம்பளப்புள்ள இப்படி பேசுதுன்னு யோசிக்கவேணாம். கதையோட களமே வேற இடம்)
"அதற்கு அவன் ஒரு சூரிய உதயம் எவ்வளவு அழகானது ஆனா அப்ப ஒரு நாய் அத கண்டுக்காம தூங்கிட்டு இருக்கு. அந்த மாதிரி மனுசங்க தவறவிடுற இந்த விஷயங்கள காட்டுறதுக்குதான் இது" என்று சொல்வான். அதற்கு அவள் அதை பெரிதாக எடுத்துக்கொண்டதுபோல பேசமாட்டாள்.
சிறிது நேரத்தில் Vienna வந்துவிடும். இறங்கப்போனவன் திரும்ப வந்து இவளிடம் "உனக்கும் எனக்கும் ஏதோ ஒரு connection இருக்குறமாதிரி தோனுது... உனக்கு நாளைக்கு திருமணம் ஆனபின்னால உன்னோட கணவரோட உனக்கு boreரடிச்சுப்போகலாம். அப்ப நெனச்சுப்பாத்து சந்தோஷப்படுறமாதிரியான சில தருணங்கள உனக்கு காட்டுறேன் எங்கூட வரியா. நாளைக்கு திரும்ப இதே நேரம் இதே இரயில்ல நீ ஊருக்கு போய்டு... என்ன சொல்ற..?" என்பான்.
அவளும் சிறிது யோசித்துவிட்டு சரி என்று அவனோடு இறங்குவாள். இறங்கியபின் அவனிடம் "உன்னோட பேரு என்ன" என்று கேட்பாள். இதற்குமேல்தான் கதை தொடங்குகிறது.
வழியில் ஒரு பேருந்து உரையாடலில் அவன் "உனது முதல் sexual feeling பற்றி சொல்" என்பதை அவள் விளக்கும்போது அவள் முகத்தைப்பார்க்கனுமே யப்பா...
அதன்பின் இசைக்கூடத்தில் அவர்களிடையே நடக்கும் பார்வை பரிமாற்றம், அதன்பின் அந்திசாயும் பொழுதொன்றில் அவள் கேட்பாள் "எங்கிட்ட முத்தம் குடுன்னு கேக்கத்தொனுதா" என்ற படி பதிலுக்கு காத்திருக்காமல் அவளளிக்கும் முதல் முத்தம்.
கைரேகை பார்ப்பவளின் வார்த்தைகள் அவள் சொன்ன " you are both stars. Don't forget. You are stardust". என்ற காட்சியாகட்டும்.
காசுக்கு கவிதை எழுதும் ஒருவனின் கனநேரக்காதலை உள்வாங்கும் அவள் மனதாகட்டும். அதை ஏற்கத்தெரியாத கதாநாயகனின் ஆண் பொறாமையாகட்டும்.
உணவக விளையாட்டு தொலைபேசி உரையாடலில் அவன்மீதுள்ள காதலை அவள் வெளிப்படுத்தும் அழகாகட்டும். அந்த இரவில் குடித்துவிட்டு இருவரும் பரிமாறிக்கொள்ளும் முத்தங்களாகட்டும். அடுத்தநாள் அவளை இரயிலேற்றிவிடும்போது அவர்கள் பேசிக்கொள்ளும் உரையாடல், அழுத்தமாய் அவள் பதிக்கும் முத்தம் என 101 நிமிடத்தில் இரசிக்க 97நிமிடம் இருக்கும் திரைப்படம் இது.
அனுபவியுங்கள் காதலின் அசைவுகளை. அதன் நெடி உங்கள் வாழ்வின் அத்தனை நொடிகளுக்குள்ளும் பரவிக்கிடக்கிறது.
2018ல் வந்த 96 படத்தை காதல் திரைப்படம் என்று கொண்டாடுபவர்களுக்கு 95லேயே வந்த இந்த திரைப்படம் ஒரு பெரும் பாடம். இதுஒரு trilogy movie. இதன் அடுத்த இரு பாகங்களை பார்த்தபின் அதைப்பற்றி பேசலாம்.
- பரிதி
❤️
கருத்துகள்
கருத்துரையிடுக