" உளவியல்... - 1 " - பரிதி
" உளவியல்... - 1 " - பரிதி
படிக்க ஆகும் நேரம் - 3:50நிமிடங்கள்
வாழ்வின் சில தருணங்களை "ஏன் இப்படி நடந்தது?" என்று புரிந்துகொள்வதன்மூலம் அந்த தருணம் இனியதாக இருக்குமானால் அதை இன்னும் ஆழ்ந்து அனுபவிக்கவும், கசப்பானதாக இருக்குமானால் விட்டு விலகிநிற்கவும் எளிதாக இருக்கும்.
ஆனால், அப்படி எல்லா தருணங்களையும் புரிந்துகொள்ள முடியாது என்று நாம் நினைத்துக்கிடப்போம், வழி தெரியாமல். ஆனால், அதற்கு வழிகாட்டும் ஒரு சரியான முறைதான் உளவியல் பற்றிய அறிதல்கள்.
சமீபத்தில் சில உளவியல் கூறுகளை படிக்கத்தொடங்கினேன். அதில் ஒன்று எனக்கு மிக ஆச்சரியத்தையும், சில தெளிவுகளையும் கொடுத்தது. கட்டாயம் நீங்களும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு உளவியல் கூறுதான் அது. (கட்டுரையின் நீளம் காரணமாக சில பகுதிகளாக வெளியிடும் தேவை உள்ளது.)
அந்த உளவியல் கூறு "PARADIGM SHIFT" - முன்முடிவுகளில் ஏற்படும் மாற்றம். ஒரு கால இடைவெளியில்(அது ஒரு நொடியாக இருக்கலாம். இல்லை, சில நாட்கள், மாதங்கள், ஆண்டுகளாகக்கூட இருக்கலாம்.) நம் மனம் எடுத்த நிலைப்பாட்டில் அப்படியே தலைகீழாக மாறிக்கிடக்கும்.
உதாரணமாக, மேலே உள்ள படத்தைப்பார்த்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றியது? ஒரு பெண் திரும்பியிருக்கிறாள் என்றா? அல்லது ஒரு சூனியக்கார கிழவியின் தோற்றமா? படத்தை மறுபடி பாருங்கள். இருவேறு நிலைக்கு மனம் போய்வரும். உங்கள் மனம் பார்த்தவுடன் எடுத்ததற்கு பெயர் முடிவு அல்ல(not a final decision) அது முன்முடிவு(PARADIGM)தான்.
இதேபோல வாழ்வின் பல தருணங்களும் நடக்கும். மேலே குறிப்பிட்ட உதாரணம் ஒரு நொடியில் நடந்த முன்முடிவில் ஏற்பட்ட மாற்றம் (PARADIGM SHIFT). நீண்ட காலத்திற்கு உதாரணம் என்றால், நீண்ட பழக்கத்தின் அடிப்படையில் ஒரு பெண்ணுக்கு ஆணையோ, ஆணுக்கு பெண்ணையோ பிடித்து வரும் காதலுணர்வைச் சொல்லலாம். அண்ணன் தங்கை என்றோ, நட்பு என்றோ தொடங்கி நீண்ட பழக்கத்தின் பின் மாறிய உறவின் நிலையை குறிப்பிடலாம்.
உறவினரோடு வரும் ஒரு நாள் சண்டை ஒரு நூற்றாண்டு பிரச்சினையாகி தொடர்வதும் இதன் விளைவே.
காரணமல்லது காரியமன்று என்று சொல்வார்களே அப்படி மனதின் எல்லா மாற்றங்களுக்கும் ஓர் காரணம் உண்டு. அதில் முக்கியமாக நாம் தெரிய வேண்டியதே இந்த PARADIGM SHIFT.
Stephen R.Cove ன் 7 Habits of highly effective people என்ற புத்தகத்தில் இதைப்பற்றிய தெளிவை அவர் கொடுத்துள்ளார். என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு புரியும் வகைக்கு நான் விளக்கப்பார்க்கிறேன்.
மனம் என்பது வெறும் நினைவுகளின் தொகுப்புதான். நினைவுகள் அற்ற நிலையில் மனம் என்ற ஒன்று இல்லை என்பது என் புரிதல்.
PARADIGM SHIFT யை பார்ப்பதற்கு முன்பு சில விடயங்களை அறிவதென்பது, அதன் மீதான புரிதலை இன்னும் ஆழப்படுத்துமென்பதால் கொஞ்சம் வெளியே சுற்றிவிட்டு PARADIGM SHIFT க்கு வருவோம்.
Sigmund Freud ன் Psycho Analytic Theory(விழிப்புணர்வற்ற மனக்கோட்பாடு)ல் மனம் மூன்று அடுக்குகளைக் கொண்டிருப்பதாக விவரிக்கிறார்...
1) Conscious State - விழிப்புநிலை
2) Pre-Conscious State - ஆழ்நிலை
3) UnConscious State - விழிப்புணர்வற்ற நிலை
நீர் நிரப்பப்பட்டிருக்கும் ஒரு கோப்பையில் மேல், நடு, கீழ் என்பதாக மனதை நினைத்துக்கொள்ளுங்கள்.
1) Conscious State - (விழிப்புநிலை)
நம் எல்லோருக்கும் தெரிந்த, நாம் அடிக்கடி வெளிப்படுத்தும் அன்றாட சமீபத்திய சிந்தனைகள்,பேச்சுகள், செயல்கள் அனைத்தும் மனதின் இந்த நிலையில் தான் பதியப்பட்டிருக்கும். இதை எப்போது வேண்டுமானாலும் எடுத்து பயன்படுத்தலாம்.
2) Pre-Conscious State - (ஆழ்நிலை)
சிலமுறைகள் மட்டுமே செய்து மறந்தவை. உதரணமாக, பத்தாண்டுகளுக்கு முன் சென்றுவந்த உறவினர் வீட்டின் வழியை பாதி தூரம் வரை சென்று, ஒரு பிரிவில் நின்று நீண்ட நேரம் யோசித்துவிட்டு பின்னர் ஞாபகம் வந்து அந்த பாதையில் போவது. இந்த நிலையில் இருக்கும் நினைவுகளை மனம் தேவையென்றால் Conscious Stateக்கு கடத்திவிடும்.
3) UnConscious State - (விழிப்புணர்வற்ற நிலை)
இது மிக முக்கியமான ஒரு நிலை. இந்த UnConscious Stateயை நாம் கொஞ்சம் விரிவாகப் பார்ப்பது என்பது, சொல்லப்போனால் உங்கள் வாழ்க்கைக்கே பயனுள்ளதாய் அமையும் என்றே நம்புகிறேன்.
அசாதாரணமான சூழ்நிலையை நாம் எல்லா நேரங்களிலும் சந்தித்துவிடுவதில்லை. ஆனால், அப்படி சந்திக்கும் நேரங்களில் நம்மை வழிநடத்துவதே இந்த UnConscious Stateதான்!
இன்னும் சொல்வதென்றால் இந்த நிலைதான் நம்மை நமக்கே அடையாளம் காட்டுகிறது. நமக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்தவோ, வாழ்வின் திருப்புமுனைகளில் எடுக்கப்படும் முடிவுகளோ இங்கிருந்தே எடுக்கப்படுகிறது.
திரைப்படங்களில் காட்டப்படுமே Hypnotism இந்த UnConscious Stateயை அறியவே செய்யப்படுகிறது.
அதனால் இதைப்பற்றி இன்னும் விரிவாக பார்த்து வரலாம். அதற்கு உதவ நமக்கு மற்றுமொரு உளவியல் கூறான Johari Window Techniqueயை அறிவது அவசியம்.
தல சுத்துறமாதிரியெல்லாம் ஒன்னுமில்லையே..?
தொடர்ச்சி அடுத்த பதிவில்...
கருத்துகள்
கருத்துரையிடுக