முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தற்சார்பு - 8 - பரிதி

தற்சார்பு - 8 - பரிதி

படிக்க ஆகும் நேரம் - 4:50 நிமிடங்கள்

"அறிவியலும், பகுத்தறிவும்..."

சுய அறிவின் வழி சிந்திப்பதே தற்சார்பின் தொடக்க நிலை என்பதை கடந்த கட்டுரைகளில் பார்த்தோம். அப்படியான ஒரு மிக மோசமாக நம் கால்களை பற்றி இருக்கும் இரு விலங்குகளைப்பற்றிதான் இந்த கட்டுரையும்.

"மூடநம்பிக்கை எனும் நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள். ஒன்று, பகுத்தறிவு. மற்றொன்று, அறிவியல்" என்று இயற்கை வழி வாழ்வியல் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்கள் சொல்கிறார்.

பகுத்தறிவும்,அறிவியலும் தான் மூடநம்பிக்கையெனும் இருளை வெளிச்சமிட்டு விரட்டியதாக நமக்கு சொல்லிக்கொடுத்தார்கள், நாமும் படித்தோம். ஆனால் ஐயாவின் இந்த வார்த்தைகள் மிகவும் ஞானம் செறிந்தவை...

பகுத்தறிவு, அறிவியலைப்பற்றி ஐயா நம்மாழ்வார் அவர்கள் கூறிய மற்றொரு கருத்தையும் இங்கே சொல்வது சிறப்பென நினைக்கிறேன். "பகுத்தறிவும்,அறிவியலும் முழுமைபெறாத ஒன்று!" என்பார். எப்படி என்ற கேள்வியுடன் தொடங்குவோம்.

முதலில் அறிவியலைப் பேசுவோம்...

ஆரம்ப கால அலைபேசியை நினைத்து கொள்ளுங்கள். அது எந்த வடிவில் இருந்தது, அதில் இருந்த பயன்பாடுகள்(apps) என்ன என்று.

தற்போது..?

ஆக காலத்தின் வழிநெடுக பலமாற்றத்தோடு உங்கள் கையில் இருக்கும் தற்போதய திறன்பேசிதான் அலைபேசியின் கடைசி தொழில்நுட்பம் என்றும் இனிமேல் இதில் மாற்றமே வராது என்றும் உங்களால் சொல்லமுடியுமா?
சொல்லமுடியாது என்றால் இந்த தொழில்நுட்பம் போலதான் மொத்த அறிவியலும் முழுமைபெறாத ஒன்று. அதில் இன்னும் பல்லாயிரம் மாற்றங்களை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. அப்படியே செய்தாலும் அது முழுமை பெறாது இன்னும் நீளும்.

இன்னொரு உதாரணமும் தருகிறேன்... தாவரங்களுக்கு உயிர் இருக்கிறதென்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பகுத்தறிவுவாதிகள் சொல்லும் காட்டுமிராண்டி மொழி தமிழ் சொல்லிவருகிறது. அதன்பின் சர் ஜெகதீஷ் சந்திர போஸ் 1900களில் சொல்லியதைத்தான் உலகம் ஏற்றது. அதன்பின் தாவரமானது மண்ணிலிருந்து 16 வகையான சத்துகளை மட்டுமே எடுத்துக்கொள்வதாக கண்டுபிடித்தார்கள். மறுபடியும் முப்பது ஆண்டுகள் கழித்து இப்போது 36-40 வகையான சத்துகளை எடுத்துக்கொள்வதாக கூறுகிறார்கள். நாளை எத்தனை சொல்வார்கள் என்றும் தெரியாது. உண்மையில் அது எத்தனை சத்துகளை எடுத்துக்கொள்கிறது என்பதும் தெரியாது. மனிதன் சிந்தித்துக்கொண்டிருக்கிறான் இயற்கை இயங்கிக்கொண்டிருக்கிறது என்பார் ஐயா நம்மாழ்வார்.

இந்த முழுமைபெறாத அறிவியலை துணைக்கு வைத்துக்கொண்டு இயங்கும் இவர்கள் காட்டும் பகுத்தறிவும் முழுமைபெறாத ஒன்றே!

எப்படி...?

தீமிதிப்பதில் என்ன பக்தி இருக்கிறது என்று அறிவியலின் துணையோடு ஒரு விளக்கம் கொடுப்பார்கள்...
"எரிந்த கட்டையின் மீது சாம்பல் பூக்குமே அது வெப்பம் எளிதில் கடத்தாத ஒன்று. கால்களில் சிலமணிநேரமாக ஈரம் படர்ந்து இருப்பதால் வெப்பத்தை கால்கள் உணர்வதற்குள் தீக்குழியை கடந்துவிடுவார்கள்..." என்று விளக்கம் கொடுப்பார்களே ஒழிய அவர்களுக்கு என்று ஒரு தத்துவம் இருக்காது.

மேலு‌ம் பகுத்தறிவுவாதிகள் எல்லாவற்றையும் பகுத்தறிவார்கள், அவர்கள் அறிவின் வழி நடப்பவர்கள் என்றால் தற்கால உணவுப் பொருட்கள் முழுவதும் நஞ்சேறியதே என்று பகுத்தறிந்து ஏன் அதை நிராகரிக்கவில்லை? அரசியல், தன் வாழ்வியல் என்று எதையும் பகுத்தறியாதது ஏன்? எல்லாம் குறைகளற்று புனிதமாகிவிட்டதா? அவர்கள் எடுக்கும் பகுத்தறிவு வகுப்புகளில் இன்றைய உணவுமுறைபற்றி எத்தனை வகுப்பெடுத்திருக்கிறார்கள்? அறிவியல் என்ன சொன்னாலும் ஏற்போம் என்பவர்கள் ஆன்மிகத்தில், சித்தர் அறிவியலை ஏற்க மறுப்பது ஏன்?

இதையெல்லாம் விட்டுவிட்டு இவர்கள் நூறு அல்ல நண்பர்களே கோடி பகுத்தறிவு வகுப்பெடுத்தாலும் அவர்களின் சிந்தனை முழுமைபெறாது. இறையின் தத்துவம் தெரியாமல் கோயிலுக்கு போகிறவனுக்கும், வாரம்தவறாமல் தேவாலயத்துக்கு போகிறவனுக்கும், நாள் தவறாமல் தொழுகை நடத்துபவனுக்கும், மாதம்தோறும் இவர்கள் பகுத்தறிவு வகுப்பெடுப்பதற்கும் எள்மூக்கின் நுணி அளவுகூட வித்தியாசமில்லை.

இவர்களுக்கு பகுத்தறிவு என்றாலே கடவுளை மறுப்பது, தாலியை அறுப்பது தான். ஈ.வே.ராவிடமிருந்து இவர்கள் எடுத்துக்கொண்டது இதைமட்டும்தான். ஈ.வே.ராவை முழுமையாக ஏற்ற ஒருவனும் அவர்களின் கூடாரத்தில் இருக்கமாட்டான். நானும் கடவுள் மறுப்பாளன்தான். ஆனால் இறை என்பது ஒரு நிலை(state) என்பதுகூட புரியாத அளவுக்கு முட்டாள் அல்ல. வள்ளலாரின் திருவருட்பாவை வைத்து ஐயா சுப.வீ போன்றோரை சொற்பொழிவு செய்யச்சொல்லுங்களேன் பார்க்கலாம். வள்ளலாரின் வழியே உலகின் ஆகச்சிறந்த அறிவியல் பாதை.

2012-15களில் ஈ.வே.ரா அவர்களை சகலமுமாக நம்பி பகுத்தறிவு பேசித்திரிந்தபோது அவரைப்பற்றி சில கட்டுரைகளையும் எழுதியிருந்தேன். ஆனால் அதன்பின் அதில் ஏதோ முழுமைத்தன்மையை உணராத மனம் சித்தர் அறிவியலை ஏற்கச்சொல்லி நகர்த்தியது. பிறகு ஈ.வே.ராவின் கோட்பாடுகளில் தெரிந்த குறைகளை விமர்சனம் செய்து எழுதத்துவங்கினேன். அப்போது ஒரு நண்பர் ஒரு கருத்தை எழுதினார். "என்ன நீங்க பெரியார விமர்சனம் செய்றீங்க. அவரு யார் தெரியுமா? அவர் வாழ்ந்த காலத்துல நீங்க வாழல, அவர்கூடவும் பயணிக்கல அப்படி இருந்துகிட்டு அவர நீங்க எப்படி விமர்சிக்கலாம்?" என்று சரமாரியாக கேட்டார். பதிலுக்கு நான் ஒரே ஒரு கேள்வியைக்கேட்டேன். "ஆறுமாதம் முன்பு நான் எழுதிய கட்டுரைகளுக்கு நீங்கள் விருப்பம் தெரிவித்து ஆகா ஓகோவென புகழ்ந்தீர்களே அப்போதும் நான் அவர் காலத்தில் வாழாதவன்தான், அவரோடு பயணிக்காதவன்தான். அப்போது ஏன் இப்படி கேட்கவில்லை?" என்று. அடுத்த சில நிமிடங்களில் என்னை அவர் நட்பிலிருந்து நீக்கி தடை செய்துவிட்டார். அவரை நான் சிந்திக்கச்சொன்னதில்தான் சிக்கல் என்றால் அறிவியல், பகுத்தறிவு என்ற பெயரில் மறுபடியும் ஒருவிதமான மூடநம்பிக்கையை தற்போதய சமூகத்தில் பரப்பி வருகிறார்கள் என்று ஐயா நம்மாழ்வார் அவர்கள் வருத்தப்பட்டதையும் இந்த தருணத்தில் நினைவு கொள்ள வேண்டும்.

உடனே, நீ தட்டச்சு செய்ய பயன்படுத்திய மடிக்கணினி எங்களுக்கு அனுப்ப பயன்படுத்திய இணையம் எல்லாமே அறிவியலின் கண்டுபிடிப்பு தானே என்று உங்களுக்குள் ஒரு கேள்வி எழும்பும். அது தவறும் இல்லை. ஆனால் அறிவியலை எங்கு நிறுத்த வேண்டும், எங்கு தூக்கி எறிய வேண்டும் என்கிற புரிதல் இல்லாத தன்மையைத்தான் மூடநம்பிக்கை என்ற வட்டத்திற்குள் நிறுத்துகிறேன்.

அலைபேசியிலும் இணையத்தையும் கொடுத்த அதே அறிவியல்தான் Hacking தொழில்நுட்பத்தையும் அணு ஆயுதங்களையும் தந்துள்ளது என்பதையும் மறக்க வேண்டாம். இவற்றுக்காக அவற்றையெல்லாம் ஏற்க மறுக்கலாமா என்ற உங்களின் கேள்வி எப்படி இருக்குமானால், ஒரே ஒரு துளி நஞ்சு கலந்ததற்காக ஒரு கோப்பை பாலை வீணடிப்பது சரியா என்பது போல இருக்கும்.

பேரன்புகள்..!

- இறைவி சிந்தனைக்களம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யட்சி - யட்சன்

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை? - பரிதி

தமிழ்த்திருமணம் - மின்னூல் & முழு ஒலித்தொகுப்பு