தற்சார்பு – 3 – பரிதி

தற்சார்பு – 3 – பரிதி

படிக்க ஆகும் நேரம் – 4.30 நிமிடங்கள்

“வியாபாரிகள் விவசாயிகள் அல்ல”

முதல் கட்டுரையிலேயே குறிப்பிட்டிருந்தேன் “விவசாயத்தை வியாபரிகள் கையிலெடுப்பதற்குள் நீங்கள் கையிலெடுத்துக்கொள்ளுங்கள்” என்று ஐயா நம்மாழ்வார் சொல்லியிருந்ததை. உங்களைச்சந்திப்பவர்கள் இடைத்தரகர்களே. அவர்கள் விவசாயிகள் அல்ல வியாபாரிகள்.
“ உழுது விதைத்து அறுப்பார்க்கு உணவில்லை
பொய்யைத்தொழுது அடிமை செய்வார்க்கே
செல்வம் எல்லாம் உண்டு ” என்பது பாரதியின் வரிகள். அவன் எழுதிய காலத்திலிருந்து இந்த நிலைமை அப்படியே உள்ளது என்பது வருந்தத்தக்கது.

நீங்கள் சாதாரணமாக மளிகைக்கடையில், பல்பொருள் அங்காடி(super market)ல் நடக்கும் வியாபாரத்தைம், அதன் ஏமாற்றையும் பற்றித்தான் மறுபடியும் இங்கேயும் பேசப்போகிறேன் என்று நினைத்துவிடவேண்டாம். அதைத்தாண்டிய ஒரு வியாபாரம் இங்கு உள்ளது. அதுதான் ORGANIC STORE வியாபாரம். இதை வியாபாரம் என்று பேசினால் வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு வருவார்கள். அவர்கள் எல்லோரும் புனிதர்கள் இல்லை. அவர்களைப் பார்த்து நான் வைக்கும் கேள்விகள்...

· தற்சார்பு பேசும் உங்களுக்கு கடை வைத்து வியாபாரம் செய்யும் தேவை எதற்கு?

· உங்கள் கடைதோறும் அந்த பெருமகன் ஐயா நம்மாழ்வாரின் படத்தை வைத்துள்ளீர்களே என்ன காரணம்?

· தற்சார்பு என்ற வார்த்தையையும் நம்மாழ்வார் என்ற பெயரையும் வைத்து நீங்கள் செய்யும் வியாபாரம் உங்களுக்கு மனதை உறுத்தவில்லையா?

· இப்போது உள்ள நகரச்சூழலில் வீட்டுத்தோட்ட முறையில் காய்கறித்தேவைகளுக்கு மட்டுமே மக்கள் தன்னைச்சார்ந்திருக்க முடியும் எனும்போது அரிசி, பருப்பு போன்றவைகளுக்காக விவசாயிகளைத்தான் சார்ந்திருக்க முடியும். தற்சார்பற்ற சூழலில் விவசாயிக்கும் மக்களுக்கும் இடையிலிருக்கும் மளிகைக்கடைக்காரரையும், பல்பொருள் அங்காடிக்காரரையும் தரகர் என்கிறோம். இப்போது மக்கள் சிந்தித்து சிறுதானியங்களை வாங்க அதீத ஆர்வம் காட்டுகிறார்கள். விவசாயிகளும் சிறுதானியங்களைப்பயிர் செய்ய முன்வருகிறார்கள். இப்படி இருக்கும்போது இப்போது இவர்களுக்கு இடையில் இருக்கும் நீங்கள் யார்? உங்களையும் இடைத்தரகர் என்று சொல்லும்போது இல்லை நாங்கள் இயற்கை ஆர்வலர்கள் என்று அடையாளப்படுகிறீர்களே ஏன்?

· விவசாயிகளை தாங்கள் விளைவிக்கும் பொருள் விற்குமோ? வாங்க ஆட்களற்று வீணாகிப்போய்விடுமோ? என்ற பயத்திலிருந்து விடுவித்து அவர்களின் பொருளுக்கு நாங்கள் பாதுகாப்பு கொடுக்கிறோம் என்று மட்டும் ஒரு மகா பொய்யை தயவு செய்து சொல்லிவிடாதீர்கள் ORGANIC STORE வியாபாரிகளே.

இப்போது நண்பர்களே உங்களைப்பார்த்து கேட்கிறேன், ஒரு ORGANIC STOREக்கு ஒரு விவசாயி முழுக்க இயற்கை முறையில் கம்பு 10kg விளைவித்து தருகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், ORGANIC STOREல் 2kg தான் விற்கிறது. மீதமுள்ள 8kg விற்கவில்லை. பூச்சி வைக்கும் நிலைக்கு வந்துவிட்டது. இப்போது அந்த ORGANIC STORE முதலாளி இயற்கை ஆர்வலராக சிந்தித்து 8kg கம்பை யாருக்காவது வந்த விலைக்கு விற்கவோ அல்லது நம்மாழ்வார் நினைவாக யாருக்காவது தானமாகவோ கொடுத்துவிடுவாரா? அல்லது அந்த ORGANIC STORE முதலாளி ஒரு வியாபாரியாக சிந்தித்து விவசாயியால் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அந்த கம்பின்மீது பூச்சி அரிக்காமலிருக்க ஏதேனும் மருந்தைத்தெளிப்பாரா? முதலீடு போட்டு வியாபாரம் செய்யும் ஒரு வியாபாரியின் சிந்தனை எப்படி இருக்கும் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

நான் பெரிதும் மதிக்கும் ஐயா திருமூர்த்தி போன்றவர்கள் விவசாயியாகவும் தன் பொருளை வணிகம் செய்பவராகவும் இருக்கிறார். தற்சார்பை முழுமையாக தன் வாழ்வில் செயல்படுத்தியிருப்பவர் அவர். அவரைப்போற்றுகிறேன். அண்ணன் செந்தமிழன் மணியரசன், வாழும் நம்மாழ்வாராக அவரை நான் பார்க்கிறேன். அவரின் பெயரைச்சொல்லியும் வியாபாரம் செய்கிறீர்கள் என்றால் அவர்களிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டதுதான் என்ன?

மக்கள் தற்சார்பு நோக்கி நகரத்துவங்கும் பாதையில் அவர்களின் கால்களைப்பிணைத்திருக்கும் முதல் சங்கிலியே நீங்கள்தான். உங்களைத்தான் இப்போது முதலில் உடைத்தெரியவேண்டும். கொஞ்சதூரம் நடந்தால் விவசாயியிடம் வாங்கலாம் என்ற எண்ணத்திற்குள் போகவிடாமல் கொஞ்சம் அதிகமாக காசு கொடுத்தால் இவர்களிடமே வாங்கிக்கொள்ளலாம் என்ற எண்ணத்தை உருவாக்கி அதை பாதுகாத்தும் வருபவர்கள் நீங்கள்தான்.

மாடித்தோட்டம் போட உங்களுக்கு பயிற்சி தருகிறேன் 2000ரூபாய் தாருங்கள். உளுஜி தியானம் சொல்லித்தருகிறேன் 5000ரூபாய் தாருங்கள் என்பவனை கழட்டி அடிக்காமல் வருகிறீர்களே என்பதே என் வருத்தம். உங்கள் வாழ்வை நீங்கள் வாழத்தெரிந்துகொள்ள இந்த பேரியற்கை உங்களுக்கு எந்த தடையையும் இங்கு ஏற்படுத்தி வைக்கவில்லை. இடையில் இவர்கள் யார் அற்ப மனிதர்கள். ஒரு தொட்டியில் தக்காளியை நீங்களே வளர்த்துப்பாருங்கள் சரியாக வளரவில்லையா புடுங்கிவிட்டு மறுபடியும் வேறு வளர்த்துப்பாருங்கள். அரிசி பருப்புக்கு ஒரு விவசாயியை நேரடியாக தேடிப்ப்பாருங்கள்.

 பேரன்புகள்..!

- இறைவி சிந்தனைக்களம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை? - பரிதி

யட்சி - யட்சன்

கவிதை - அன்பு என்பது... - பரிதி