தற்சார்பு – 1 - பரிதி

தற்சார்பு – 1 - பரிதி

படிக்க ஆகும் நேரம் - 3.30 வினாடிகள்

“கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்”
இந்த கிருமித்தாக்குதலால் ஒரு பக்கம் உலகில் பொருளாதாரச்சண்டை, வல்லாதிக்க நுண்ணரசியல்(micro politics) சண்டை. நாட்டிலோ இந்து இசுலாமிய சண்டை, சலுகைசார் முதலாளிய(crony capitalism)சண்டை, மண்சார் மருத்துவமா? அயல் மருத்துவமா? என்ற மருத்துவசிகிச்சைமுறை சண்டை, வாழ்வியல்முறை குறித்த சண்டை இது எல்லாம் பேசுபொருளாகியிருக்கிறது. என்னளவில் தற்சார்புகுறித்து பேச இதுஒரு சரியான தருணமாகத்தெரிகிறது. முன்னொரு காலத்தில் அவ்வளவுபெரிய நிலத்தை வைத்து யானைகட்டி போரடித்த நாம் இன்று கறிவேப்பிலைக்குக்கூட கடையைத்தேடுவது நல்ல நகைமுரண்.

தற்சார்பு என்றவுடன் மூன்றுநாள் பயிற்சி, ஐந்துநாள் பயிற்சி என்று சொல்லி மூவாயிரம், ஐந்தாயிரம் வாங்கிக்கொண்டு நடத்துவது குறித்தோ, அந்தப்பெருமகன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் படத்தைவைத்து சிறுதானியங்களை உங்கள் கைகளில் சேர்க்கிறோம் என்று பேசி அதன் விலையை ஏற்றி வைத்து நம்மிடம் காசு பார்க்கும் கீழ்த்தரமான வியாபாரத்தைப்பற்றியோ பேசப்போகிறேன் என்று நினைத்துவிடவேண்டாம்.

தான் வாழும்காலத்தில் ஐயா நம்மாழ்வார் நம்மைப்பார்த்து சொன்ன ஒன்று “விவசாயத்தை வியாபரிகள் கையிலெடுப்பதற்குள் நீங்கள் கையிலெடுத்துக்கொள்ளுங்கள்” என்பது. பசித்தவனுக்கு மீனைக்கொடுக்காதே மீனைப்பிடிக்க கற்றுக்கொடு என்பார்களே அதைப்போல. தற்சார்புகுறித்து உங்களிடம் பேசுபவர்கள் எல்லோருமே உங்கள் கையில் மீனைக்கொடுப்பவர்களே. ஒருநாளும் உங்களுக்கு மீனைப்பிடிக்க கற்றுக்கொடுக்கமாட்டார்கள்.

உங்களுக்கு ஒரு மரத்தை வளர்த்து பராமரிக்கத்தெரியாது என்ற ஒரே காரணத்தால், ஊரிலுள்ள மொத்த மரத்தையும் குத்தகைக்கு எடுத்து உங்கள் பசியை காசாக்கத்தெரிந்தவர்கள்தான் வியாபாரிகள். தற்சார்பு பேசுபவர்களும் இவர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல. உங்களுக்கு மரம் வளர்க்க கற்றுத்தரவும் காசு கேட்கிறார்கள் என்றால் இவர்கள் அவர்களைவிட சிறந்த வியாபாரிகள்தானே?

தற்சார்பு என்பது ஒரு தத்துவம். அது ஒரு வாழ்வியல்முறை. தான் வாழ்ந்த இடத்தை(வானகம்) அப்படியான ஒரு தத்துவார்த்தக்கூடமாக வைத்திருந்தவர் தான் ஐயா நம்மாழ்வார். தத்துவம் என்றவுடன் எளிய மனிதனிடமிருந்து விலகி நிற்பது என்று நினைத்துவிடவேண்டாம். பசித்தவனுக்கும் புரியும் எளிய நடை அதற்கு உண்டு.

இறையை அறிந்துகொள்வதென்பது எல்லா மனித உயிர்க்குமான அவசியம். பசியின்போது உணவைத்தேடுவதைப்போல. ஆனால் கண்டுகொள்ளமுடியாதபோது அதைக்காட்டித்தருவதற்கு காசுவாங்கும் குருமார்களின் செயல் உலகின் ஆகச்சிறந்த அயோக்கியத்தனம்.
நீங்கள் எங்கு இருந்தாலும் சரி. உங்களுக்கு நூறு ஏக்கர் நிலமிருந்தாலும் சரி, ஆறே ஆறு தொட்டி வைக்குமளவுக்குதான் வீட்டின் முன்புறம் இருக்கிறதென்றாலும் சரி. முடிந்தவரை உங்களைச்சார்ந்தே உங்களை வாழப்பழக்கும் தத்துவம்தான் தற்சார்பு. அதை நம்மாழ்வாரின் பார்வையை வைத்து அறிவது எளியவழி.

மத்தேயுவின் சுவிசேஷத்தில் அதிகாரம் 6ல் 9வது வரியில் மகான் ஏசு சொன்னதாக வரும் தேவ வசனம் சொல்கிறது “கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்று. உங்களுக்கு காதிருந்தால் மேற்சொன்ன எல்லாம் கேட்கும். “கடைவிரித்தேன் கொள்வாரில்லை கட்டிக்கொண்டேன்” என்று வள்ளலாரையே மண்ணைக்கவ்வவைத்த பூமியில் இது சாத்தியமில்லை என்று எப்போதும் நம்புகிறவனல்ல நான்.

அதே மத்தேயு, அதிகாரம் 6ல் 12வது வரியில் “(அறிவு) உள்ளவன் எவனோ அவனுக்குக்கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான் ; (அறிவு) இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்” என்பார். நாம் யார் என்பதை நமது வாழ்வு வெளிப்படுத்தும்.
பேரன்புகள்..!

- இறைவி சிந்தனைக்களம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை? - பரிதி

யட்சி - யட்சன்

கவிதை - அன்பு என்பது... - பரிதி