சிறுகதை - பேசவிடு பேசிவிடு - பரிதி வருங்கால உழவன்



பேசவிடு பேசிவிடு                             1 
நேரம், மாலை 06:17. . .
மெல்ல வேகம் குறைந்து பேருந்துநிறுத்தத்தில் ஒரு  பேருந்து  நிற்கிறது.
“டீச்செர்ஸ் கால்னிலாம் எறங்குங்க…” சத்தமாக ஒலித்த நடத்துனரின் குரல் முடிவதற்குள் இரண்டு இளம் பெண்கள் ஒரு இளைஞன் என மூன்றுபேர் இறங்குகிறார்கள். இறங்கியதும் ஒரு பெண் செவியணியில் பாடலைக்கேட்டபடி வேகமாக நடந்துபோகிறாள். பேருந்தில் யாரும் ஏறவில்லை. தொடர்ச்சியான இரண்டு விசில் சத்தத்தோடு பேருந்து கிளம்பியது. பேருந்து நிறுத்தத்திலிருந்து மெல்ல நடக்கத்தொடங்கிய ராகுலை “கொஞ்சம் நில்லுங்க…” என்று கூப்பிட்டது அந்த இன்னொரு பெண்ணின் குரல். சட்டென திரும்பிய ராகுல் அந்த பெண்ணைப்பார்த்தபின் “என்னையா கூப்பிட்டிங்க..? ” என்றான் கொஞ்சம் ஆச்சர்யத்தோடும்.
அந்த ஆச்சர்யத்திற்கு காரணம் அவளின் அழகு. அதுவுமில்லாமல் ராகுல் ஒரு 90’s KID. ஆனால், அந்த பெண்ணின் முகம் முழுக்க ஏதோ ஒருவகை கலவரம் தொற்றியிருந்ததை ராகுலால் அவள் முகத்தைப்பார்த்தபோது உணரமுடிந்தது. அது ஒரு பூங்காவுக்கு செல்லும் சாலை, பெரிதாக ஆள்நடமாட்டம் இல்லை. ராகுல் இரண்டு மூன்று அடி இடைவெளியில் அவளுக்குப்பக்கத்தில்போய் நின்று பேசத்தொடங்கினான் தயக்கத்தோடு…
“என்னங்க..? ”
“கொஞ்சநேரம்… எங்கூட இங்கயே நிக்கமுடியுமா..? ”
“என்ன..? ஏன்..? ”
“கேள்வி கேக்காதிங்களே please…”
“ம்ம்… சரி.”
அவள் ராகுலின் முகத்தைப்பார்க்காமலேயே பேசினாள், அதற்குமேல் அவள் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருவரும் கால்மணிநேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டிருந்தார்கள். மெல்ல இருட்டத்தொடங்கியது…
“ஏங்க, எதாவது உங்களுக்கு பிரச்சனையா..? இல்ல… ரொம்ப நேரமாச்சு, நான் உங்கள இந்த தெருவுல பாத்ததுமில்ல. உங்கவீடு எங்க இருக்கு? நான்வேணா வீடு வரைக்கும் வரட்டுமா? ” என்ற ராகுலின் கேள்விகளுக்கு வேண்டாம் என சொல்வதுபோல தலையை மட்டும் அசைத்துவிட்டு அமைதியாகவே நின்றுகொண்டிருந்தாள். அவள் ஏதோ பெரிய பிரச்சனையிலிருப்பதாகமட்டும் ராகுலுக்கு தோன்றியது. அவள் முகத்தைப்பார்த்தபடியே நின்றிருந்தான். அலைபேசி மணி ஒலிக்கிறது. ராகுலின் வீட்டிலிருந்து அம்மா அழைக்கிறாள்.
“அம்மா நான்… friendகூட வெளிய இருக்கேன் வர கொஞ்சம் late ஆகும்.”
“சரி சீக்கிரம் வந்துடுப்பா…” அழைப்பு துண்டிக்கப்பட்டது.
“ஏதாவது சாப்பிடுறீங்களா? ” பதிலுக்கு மீண்டும் தலையசைப்பு.
“எம்பேரு ராகுல். உங்க பேரென்ன..? ”
“ரஞ்சனி”
“என்னாச்சுங்க? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? ” ராகுலின் இந்த கேள்விக்குப்பின் ரஞ்சனி அழத்தொடங்கியிருந்தாள். பெயருக்கு “அழாதிங்க…” என்றான். மற்றபடி அவள் அழுகையை அடக்கச்சொல்லும் எண்ணம் அவனுக்குள் இல்லை.
“சரி, சொல்லுங்க. என்னாச்சு..?”
“எங்கூட வீடு வரைக்கும் வரமுடியுமா? என்றாள் அழுகைக்கிடையில்.
“சரி, வாங்க.” இருவரும் நடக்கத்தொடங்கினார்கள். அவள் அழுகை கொஞ்சம் அடங்கியிருந்தது. வழியில் “இந்த சந்துக்குள்ள போனா 8வது வீடுதான் நம்ம வீடுங்க. ஒருநாள் வாங்க” என்றான் ராகுல். சரி என்பதைப்போல தலையசைத்தாள். ரஞ்சனி வீடு இருக்கும் தெருவின் முனைவரை ராகுல் அவளை விட்டுவிட்டு வீடு திரும்பினான்.



  பேசவிடு பேசிவிடு                              2  
நேரம், மாலை 04:50. . .
ள் நடமாட்டமில்லாத இடத்தில் மயக்கமருந்து தெளிக்கப்பட்டு ஒரு பெண் ஒரு மகிழுந்தில் ஒரேஒரு ஆளால் கடத்தப்படுகிறாள். அவள் கண்விழித்து பார்த்தபோது ஒரு அறைக்குள், பஞ்சு மெத்தையின்மீது கிடந்திருப்பதை உணர்ந்தாள். உடலெங்கும் அச்சம் பரவியநிலையில் கட்டிலில் எழுந்து உட்கார்ந்தபோது எதிரில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் தேநீர் குடித்தபடி நாற்காலியில் உட்கார்ந்திருந்தான்.
“எழுந்துட்டியா..? ”
“யார் நீ..? ”
“பாத்தா தெரியல..? தனியாள், ஆம்பள.”
“உனக்கு என்ன வேணும்..? என்னைய ஏன் இங்க கூப்பிட்டு வந்திருக்க..? ”
“எனக்கு என்ன வேணுமா..? ஒன்னுமில்ல பெண்ணுடல், அதுவும் உன்னுடலா இருந்தா இன்னும் சந்தோஷம்.” என்றான் அமைதியாக.
“இவ்வளவுதானா…” என்றாள் கொஞ்சம் ஆசுவாசப்பட்டவளாக.
கடத்திவந்தவனுக்கோ ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி. “இவ்வளவுதானாவா..! உனக்கு பயமா இல்ல..? ” என்றான் வியப்பாக.
“உன்னப்பாத்தா சாதாரண ஆள் மாதிரி இருக்கு. கற்பழிச்சா இப்போல்லாம் உன்னையமாதிரி சாதாரண ஆளுங்கள encounterல சுட்டுடுவாஙன்னு தெரிஞ்சும், உனக்கே பயமில்ல. ஹும்…எனக்கென்ன பயம் வேண்டிக்கெடக்கு..? அதுவுமில்லாம காதல் கல்யாணத்துக்கெல்லாம் எங்க வீட்டுல ஒத்துக்கமாட்டாங்க. முன்னபின்ன பழகாத ஒருத்தன்கிட்டதான் இந்த கற்பு போகப்போகுது பெத்தவங்களுக்காக. அத என்னோட உயிர காப்பாத்திக்கிறதுக்காக குடுக்குறது எனக்கு ஒன்னும் மோசமா தெரியல. என்ன… நீ என் மனசுக்கு புடிச்சவனா இருந்திருந்தா இன்னும் சந்தோஷமா இருந்திருக்கும் அவ்வளவுதான். மனசுக்கு புடிச்சவங்களோட சந்தோஷமா இருக்குற மாதிரி இப்பயெல்லாம் நெறைய scandal videos வருதே… நீ பாத்திருப்பியே” என்ற கேள்விக்கு அவனிடம் பதிலில்லை.
“என்ன… அமைதியாவே இருக்க..? ”
“இல்ல மயக்கமருந்து தெளிக்காமயே கூப்பிட்டிருக்கலாமோன்னு தோனுது.” என்று அவன் சொன்னதும் பலமாக சிரித்தாள்.
“ரொம்ப தைரியமோ உனக்கு..? ”
“இருக்கலாம்”
“டீ குடிக்கிறியா..? ”
“இல்ல, வேண்டாம்.”
அருகிலிருந்த நாற்காலியின்மீது தேநீர் கோப்பையை வைத்துவிட்டு எழுந்து ஜன்னலை நோக்கி நடந்தான். அது ஒரு குறைந்த வாடகையுள்ள தங்குவிடுதி. அதற்குறிய அளவுள்ள இரும்புக்கட்டில், பஞ்சுமெத்தை தலையணைகளோடு. நகரத்தின் மையத்தில் அமைந்திருப்பதால் வாகனங்களின் இறைச்சல் சத்தம்  கொஞ்சம் அறைக்குள்ளும் கேட்டுக்கொண்டேயிருக்கும். ஜன்னலை சாத்திவிட்டு அவளைப்பார்த்தான். அவளும் அவனைப்பார்த்தாள். தனது மூச்சு சூடாவதை அவன் உணர்ந்தான். முதுகுத்தண்டில் ஏதோ ஒரு குறுகுறுப்பு. அவளைப்பார்த்தபடியே மெல்ல கட்டிலை நோக்கி நடந்து கட்டிலின்மீது உட்கார்ந்தான். கண்கொட்டாமல் அவளும் அவனைப்பார்த்தபடியே இருந்தாள். அவள்கைகளைப்பிடித்து விரல்களைத்தடவினான். முதலில் அவள் வெடுக்கென இழுத்துக்கொண்டாள்.
“என்னாச்சு..? ” என்றவனிடம் “ஒன்னுமில்ல” என்றாள் மெல்லிய குரலில். மறுபடி கைகளை இழுத்து விரலுக்கு முத்தமிடப்பார்த்தவனை இழுத்து கட்டிக்கொண்டு நெற்றியில் முத்தமிட்டாள். முதல் முத்தம் அவளிடமிருந்து வந்தது இவனுக்கு மேலும் சந்தோஷத்தையும் ஆச்சர்யத்தையும் தந்தது. பதில் முத்தமிட்டான். கண்கள் சொருகிய நிலையில் அதை ஏற்றுக்கொண்டாள். அவளைக்கட்டியணைத்தவாறே படுக்கையில் இருவரும் சாய்ந்தார்கள். கீழே அவனைக்கிடத்தி அவனுக்கு மேல் இவளிருந்தாள். அவனுக்குள் ஏறிய போதையில் அவன் முனகத்தொடங்கினான். தனக்குள்ளும் மூச்சு சூடாவதை அவளும் உண்ர்ந்தாள். அவனது சட்டையை கழற்றியவள் அவனது கால்சட்டையையும் கழற்றினாள்.  அவனது கைகளை கட்டிலின் கம்பிகளில் அவனிடமிருந்து கழற்றிய துணிகளை வைத்துக்கட்டிவிட்டு பின் மேலிருந்து கீழாக பாம்புபோல் அவன்மீது ஊறினாள். தலையிலிருந்த hair clipயை கழட்டி பக்கத்திலிருந்த ஜன்னலில் வைத்தாள்.
மணி மாலை 5:55ஐக் கடந்துகொண்டிருந்தது.


  பேசவிடு பேசிவிடு                              3  
ருவாரம் கழித்த நிலையில் ரஞ்சனி ராகுலின் வீட்டுவாசலில் நின்று அவனது அம்மாவிடம் “ராகுல் இருக்கிறாரா? ” என்று கேட்டுக்கொண்டிருந்தாள்.
“இருக்காம்மா. உள்ள வா. நீ யாரும்மா..? ”
“நான் அவரோட friend.”
“உக்காரும்மா அவன கூப்பிடுறேன்.”
“ம்ம்… சரி aunty.”
ஏதோ ஒரு பெரிய மகிழ்ச்சியோடு ராகுலின் அறையை நோக்கி வேகவேகமாக நடந்தாள். கதவைத்திறந்தவள் “டேய்! யாருடா அந்த பொண்ணு..? ”
“எந்த பொண்ணு..? ”
“உன்னோட friendனு ஒரு பொண்ணு கீழ வந்திருக்கே, அது.”
“என்னோட friendஆ..? வெளையாடாத போம்மா…”
“அட… கீழவந்து பாருடா. டேய் ராகுலு அப்பாகிட்ட நீ பேசுறியா? இல்ல நானே பேசவாடா? பொண்ணு அவ்வளவு அழகா இருக்காடா.” அம்மா இவ்வளவு பேசியதும் அது அன்று பேருந்து நிறுத்தத்தில் பார்த்த ரஞ்சனியாகத்தான் இருக்கும் என்பதை ஊகித்தவாறே “ஏம்மா நீவேற, அந்த பொண்ணு யாருன்னே எனக்கு தெரியாது.”
“ஆங்… யாருன்னே தெரியாதவதான் உன்னோட பேரச்சொல்லி தேடிகிட்டு வீடுவரைக்கும் வராளா..? புளுகாதடா.”
“அவ காதுல விழப்போகுது அமைதியா வாம்மா.” கீழே அமைதியாக உட்கார்ந்திருந்தாள் ரஞ்சனி அவர்களின் உரையாடலை கேட்டும் கேட்காததுபோல.
“வாங்க ரஞ்சனி. இப்ப எப்படி இருக்கீங்க..? ”
“ம்ம்… fine.”
“நீ என்னம்மா பண்ற? உன்னோட வீடு எங்க இருக்கு..? ” என்ற அம்மாவைப்பார்த்து “ம்மா…”  என்றான் ராகுல் பல்லைக்கடித்தவாறே.
“இங்க தான் aunty பக்கத்துல ராஜா streetல. MBBS second year படிச்சிட்டு இருக்கேன்.”
“சொல்லுங்க ரஞ்சனி. வீடுவரைக்கும் வந்திருக்கீங்க.” என்ற ராகுலின் கேள்விக்கு பதிலாக அம்மாவை தயக்கத்தோடு பார்த்துவிட்டு ராகுலைப்பார்த்தாள். அம்மா ஏதோ புரிந்தவளாக “இரும்மா குடிக்க ஏதாவது எடுத்துட்டு வர்றேன்” என்று உள்ளே போனாள்.
“ராகுல், எங்கூட கொஞ்சம் வெளிய வரமுடியுமா..? ”
“ம்ம்… போலாங்க” என்றதும் அவள் எழுந்துவிட்டாள். இருவரும் கிளம்பி வாசல்வரை வந்ததும் “அம்மா தோ வந்துடுறேன்” என்றான் ராகுல் சத்தமாக. “போய்ட்டு வாம்மா. இன்னொருநாள் கட்டாயம் வீட்டுக்கு வாம்மா” என்றாள் ரஞ்சனியிடம் வாசலை நோக்கி நடந்துவந்தபடியே.
மிகவும் செயற்கையாக மெல்ல சிரித்தபடியே சரி என்பதைபோல தலையைமட்டும் அசைத்தாள் ரஞ்சனி. செல்லமாக அம்மாவை முறைத்தபடியே ராகுல் வீட்டின் கதவை சாத்தினான். பின் இருவரும் வீட்டைவிட்டு கிளம்பினார்கள்.
“Sorryங்க அம்மா கொஞ்சம் வெகுளி”
“It’s ok. No problem.”
“உங்களுக்கு ஏதோ பிரச்சனைன்னு தெரியுது. அன்னைக்கு உங்களால எதுவும் பேசமுடியல. நீங்க விருப்பப்பட்டா இப்ப சொல்லலாமே.”
எதையோ யோசித்தபடியே அமைதியாகவே வந்துகொண்டிருந்தாள் ரஞ்சனி. எதுவும் பேசவில்லை. ராகுலும் அதன்பின் எதுவும் கேட்கவில்லை. இருவரும் ஆசிரியர் குடியிருப்பு பேருந்துநிறுத்தத்திற்கு வந்திருந்தார்கள். பேருந்து நிறுத்தத்தில் வேறு யாரும் இல்லாத நிலையில் வந்த ஒரு பேருந்தில் இருவரும் ஏறினார்கள்.
“எங்கமா போகனும்..? ” என்றார் நடத்துனர்.
“ரெண்டு GH குடுங்கண்ணா” ராகுல் குழம்பியபடி ரஞ்சனியைப்பார்த்தான்.


  பேசவிடு பேசிவிடு                              4  
நான்கு நாட்களுக்கு முன். . .
Sir, Inspector பாக்கனும்.”
“உள்ள போம்மா.”
“Excuse me, sir.”
“come in.”
“Sir, நேத்து அழகப்பன் lodgeல…” என்று தயங்கியபடி இழுத்த அந்த பெண்ணிடம் “ஓ… அந்த பொண்ணு நீதானாம்மா! Very good இந்த மாதிரிதான் சரியான நேரத்துல smartஆ யோசிச்சு ஒரு action எடுக்கனும். நீ ஒன்னும் பயப்படாதம்மா just formalitiesதான் ஒரு சின்ன statement மட்டும் எழுதிகுடுத்துட்டு போ. அவன… நான் பாத்துக்கிறேன்.” என்றார் காவல் ஆய்வாளர் பல்லைக்கடித்தபடியே. “Writer கிட்ட statement குடுத்துட்டு போய்டு. தேவப்பட்டா கூப்பிடுறேன்” என்ற காவல் ஆய்வாளரிடம் “Sir… வீட்டுக்கு… தெரியவேணாம்.” என்றவளிடம் “சரிம்மா” என்றார்.
“உக்காரும்மா. அன்னைக்கு நடந்தத அப்படியே எழுதனும் சரியா.”
“ம்ம்... madam அந்த ஆள் இப்ப எப்டி இருக்காரு..? ”
“GHல ICUல வச்சிருக்காங்க. கொஞ்சம் seriousஆன conditionதானாம். அவனப்பத்தி நீ எதுவும் பயந்துக்காத. அவன நாங்க பாத்துக்குறோம்.”
“ம்ம்…” என்றவளுக்குள் குற்றவுணர்வு வார்த்தைகளை தடுத்துக்கொண்டிருந்தது.
“இந்தாம்மா paper… பேனா அங்க இருக்கு பாரு.”
“ம்ம்… mam எனக்கு தமிழ்ல எழுதத்தெரியாது.  Shall I write in English? ”
“வேண்டாம்மா, இரு வர்றேன்.” என்று சென்ற எழுத்தர் சிறிதுநேரத்தில் வந்தார். “ம்ம்… சொல்லுமா. உன் பேர் என்ன..? ”
“ரஞ்சனி.”
“என்னம்மா படிக்கிற..? ”
“MBBS, second year.”
“ம்ம்… என்னாச்சுன்னு சொல்லுமா.”
“அன்னைக்கு class இல்ல. சின்ன referenceக்காக library போய்ட்டு தனியாதான் வந்திட்டு இருந்தேன். அந்த roadல அப்போ யாரும் இல்ல. எனக்கு பக்கத்துல இடிக்கிற மாதிரி ஒரு van வந்து நின்னுது. அப்போ ஒருத்தன் என் மொகத்துல sprayஅடிச்சான். அதுக்கப்புறம் நான் மயங்கிட்டேன். அப்புறம்…”
“வண்டில ஒருத்தன் மட்டும் தான் இருந்தானா..? ”
“ம்ம்… yes mam.” என்றவளிடம் “சரி, சொல்லு” என்றார் எழுத்தர்.
“அப்புறம் நான் மயக்கம் தெளிஞ்சு பாத்தப்போ ஒரு roomல bedல படுத்து இருந்தேன். ரொம்ப பயமா இருந்துச்சு. எதிர்லதான் அந்த ஆள் டீ குடிச்சிகிட்டு உக்கார்திருந்தான்.”
“உன்னைய அடிச்சானா..? ” என்ற எழுத்தரிடம் “இல்ல mam.” என்றாள் “ம்ம்… சரி. சொல்லு.” என்றாள் எழுத்தர்.
“டீ குடிச்சிட்டு என்கிட்ட பேச்சு குடுத்தான். நானும் அவனுக்கு cooperate பண்ணுவேங்குற மாதிரி பேசி நம்பவச்சேன். அப்புறம் பக்கத்துல வந்து உகார்ந்து என் கைய பிடிச்சான். பதிலுக்கு நான் அவனுக்கு முத்தம் குடுக்குற மாதிரி அவன்கிட்ட நடந்துகிட்டு அவன படுக்கவச்சு, அவன் dressஅ கழட்டி அவனோட கைய கட்டிலோட வச்சு கட்டிப்போட்டுட்டேன். அப்பவும் அவன் என்ன நம்பிட்டுதான் இருந்தான். அதுக்கப்புறம் கட்டிலுக்குப்பக்கத்துல இருந்த ஜன்னல்ல ஒரு பழய shaving blade இருந்தது. என்னோட hair clipஅ கழட்டி அங்க வைக்கிற மாதிரி அந்த bladeஅ எடுத்தேன். அதவச்சு அவனோட penisசோட Corpus Cavernosumமையும் அப்புறம் Vas Deferensசையும் severeஆ damage பண்ணிவிட்டுட்டேன். Blood lose அதிகமா ஆனா அவன் பொழைக்கமாட்டான்னு ரத்தம் வர்ற எடத்துக்கு மேல தலையனைய வச்சிட்டு ‘அழுத்தி பிடிச்சிக்க இல்லாட்டி செத்துடுவ’ன்னு சொல்லிட்டு வெளிய ஓடி வந்து ambulanceக்கு phone பண்ணிட்டு ஓடிப்போய்ட்டேன்.” என்றவள் அழத்தொடங்கினாள்.
“சரிம்மா, அழாத. தேவைன்னா கூப்பிடுறேன்.” என்ற எழுத்தரிடம் “ I think அது அவனுக்கு பழக்கமான lodgeன்னு நெனைக்கிறேன்” என்று சொல்லி அழுதவாறே காவல் நிலையத்திலிருந்து கிளம்பினாள் ரஞ்சனி.


  பேசவிடு பேசிவிடு                              5  
    “GHலாம் எறங்கு…” என்ற நடத்துனரின் சொல்லுக்கு பேருந்து நின்றதும், அடைத்துக்கொண்டு நின்றிருந்த பயணிகளோடு ரஞ்சனியும், ராகுலும் சேர்ந்து இறங்கினர்.
    “இங்க எதுக்குங்க..? ”
    “ஒருத்தர பாக்கனும்.” என்றபடி வறவேற்பறையை நோக்கி நடந்தாள் ரஞ்சனி. “Excuse me. இங்க last week police caseல ஒருத்தர்…”
“அந்த rapistஆ…” என்றவரிடம் எதையோ யோசித்துவிட்டு “ம்ம்…” என்றாள்.
“ICUல இருந்தான். இப்போ special wardக்கு மாத்தியிருப்பாங்கன்னு நெனைக்கிறேன். நேரா போய் leftல first room.”
“Thank you.”
“Excuse me. நீங்க அவனுக்கு என்ன வேணும்? ”
“I know that person. நான் Inspectorகிட்டயும் சொல்லிட்டேன்.” என்று சொல்லி ராகுலைப்பார்த்து வா என்பதைப்போல கண்ணசைத்து நடக்கத்தொடங்கினாள். ராகுலுக்கு எதுவுமே புரியவில்லை. அமைதியாக பின்தொடர்ந்தான். அறைக்கு வெளியே ஒரு காவலரும், ஒரு அம்மாவும் இருந்தார்கள். ரஞ்சனி காவலரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். இதைப்பார்த்த அந்த அம்மா ரஞ்சனியிடம் வந்து “அம்மா என்னைய எப்படியாவது உள்ள விடச்சொல்லும்மா” என்றபடி அழுதார். அந்த அம்மாவின் முகத்தைப்பார்க்கமுடியாமல் ரஞ்சனியும் ராகுலும் அறைக்கு உள்ளே போனார்கள். “Stress ballலை அழுத்தியபடி மேலே மெல்ல சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியைப்பார்த்தவாறு படுத்திருந்த கண்ணன், இருவரையும்பார்த்து பின் மறுபடியும் மேலே பார்க்கத்தொடங்கினான்.
“I am sorry.” என்றாள் ரஞ்சனி. கண்ணன் எதுவும் பேசவில்லை. இரண்டு நிமிடம் ரஞ்சனியும் அமைதியாகவே நின்றிருந்தாள். பின் ஏதோவொரு அழுத்தத்தை தனக்குள் உணர்ந்தவள் அங்கிருந்து கிளம்ப திரும்பினாள். கண்ணன் பேசத்தொடங்கினான்…
“13 வயசுல வயசுக்கு வந்தேன். இப்ப எனக்கு வயசு 36. உடல்ல நடக்குற எந்த மாற்றமும் இந்த உலக்கத்துக்காக நிக்கல. எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து என்னோட சுயத்த இந்த சமூகத்துக்கு நிரூபிக்க ஆரம்பிச்சவன் இன்னும் நிறுத்தல, நிறுத்தவிடல. படிச்சு ஒரு வேலைக்கு… இல்ல இல்ல ஒரு நல்ல வேலைக்கு போக எனக்கு 32 வருஷம் தேவப்பட்டுச்சு. பெண், ஒரு உடல் மட்டுந்தான் அப்படின்னு ஒரு ஆணுக்கு தோன்றதுக்குள்ள அவனுக்கு கல்யாணம் பண்ணிடனும். இப்படி நான் பேசுறத கேட்டா தப்பு பண்றவங்களுக்கு இருக்குற நியாயம்தான உனக்கும் இருக்கு அதத்தான பேசப்போறன்னு தோனும். நல்லது பண்றவங்களும் எதோ ஒரு நியாயத்துக்காகத்தான் அத பண்றாங்கன்னு சொன்னா இல்லன்னு சொல்லுவிங்களா? இங்க எல்லாருமே சூழ்நிலைக்கைதிதான் அப்படிங்கிறபோது சரி, தப்ப தீர்மானிக்கிறதும் அதே சூழல்தானங்க.”
“என்னங்க இவரு ரொம்ப யோக்கியராட்டம் பேசிட்டு இருக்காரு. யாரு இவரு? எதுக்காக ரஞ்சனி இங்க நின்னுட்டு இருக்கோம்? ” என்றான் ராகுல்.
“Please ராகுல் கொஞ்சம் அமைதியா இருங்க.”
“என்ன ராகுல் சொன்னீங்க யோக்கியரா..? ஹும்… பொறந்தப்ப நானும் அம்மான்னு தாங்க அழுதேன்” என்றான் கண்ணன்.
“அதெப்படி தப்பு செய்யிற எல்லாரும் சமூகத்தையே குற்றம் சொல்றீங்க? ” என்ற ராகுலின் கேள்விக்கு கொஞ்சமும் யோசிக்காமல் “நல்லது பண்றதா சொல்ற எல்லாரும் சமூகத்துகிட்டயே பாராட்ட எதிர்பார்க்குறீங்களே அதுமாதிரிதான்” என்றான் கண்ணன்.
“ராகுல் please…” என்றாள் ரஞ்சனி. ராகுலும் அமைதியானான்.
“உங்க பேரு ரஞ்சனியா? நல்லாயிருக்கு. Sorry அன்னைக்கு உங்க பேரக்கூட கேக்கல. ஆனா அந்த கொஞ்ச நேரத்த செமயா feel பண்ணுனேன். ஏன் அப்படி செஞ்சிங்க? நீங்க பேசுன விதம், அதுல இருந்த நியாயம், அதுக்கும்மேல நீங்க என்கிட்ட நடந்துகிட்ட விதம் அதெல்லாம் வச்சு நானும் ஏதோ நம்பிக்கைல அப்படியே கெடந்துட்டேன். கவனப்பட்டுக்கல.”
“Sorry. நான் கொஞ்சம் துணிச்சலான பொண்ணு. அன்னைக்கு இருந்த சூழ்நிலைக்கு எனக்கு அதுதான் தோனுச்சு.”
“என்ன ரஞ்சனி! அப்போ… அன்னைக்கு…” என்ற ராகுலுக்கு ஆமாம் என்பதுபோல தலையை மட்டும் அசைத்தாள்.
அதன்பின் ராகுல் “நீங்க வாங்க போலாம்.” என்றதற்கு ரஞ்சனி மறுத்ததால் ராகுல் மட்டும் அறையை விட்டு வெளியேறினான். ராகுல் வெளியே வந்ததும் கண்ணனின் அம்மா “கண்ணு பையன் எப்படி இருக்கான்? ” என்று அழுதபடியே கேட்டதற்கு “ப்ச்..” என்று உச்சுகொட்டியபடியே சட்டென தலையை திருப்பிக்கொண்டு கொஞ்சம் தள்ளிப்போய் உட்கார்ந்து கொண்டான்.
ரஞ்சனி அந்த அறையிலிருந்த இருக்கையில் போய் உட்கர்ந்தாள்.
“அப்புறம் ஏன் இன்னைக்கு பாக்க வந்திருக்கீங்க ரஞ்சனி? ”
“அன்னைக்கு நீங்க எங்கிட்ட நடந்துகிட்ட விதத்த யோசிச்சுப்பாத்தேன். நான் கண் முழிக்கிற வரைக்கும் என்னைய நீங்க தொடல. கண்ணு முழிச்சதுக்கு அப்புறம் ஏதோ நீங்க என்னோட அனுமதிக்காக காத்திருந்தமாதிரி உட்கார்ந்திருந்தது, எங்கிட்ட tea வேணுமான்னு கேட்டது. என்னோட முத்தத்த நீங்க ரொம்ப feel பண்ணி ஏத்துகிட்டதயெல்லாம் யோசிச்சு பாத்தேன் ரொம்ப disturbஆ இருந்தது. அதுவுமில்லாம நான் அப்படியெல்லாம் பேசாம இருந்து அழுதுயிருந்தாலோ இல்லாட்டி கத்தியிருந்தாலோ நீங்க பயந்து விட்டிருப்பிங்களோன்னு உள்ளுக்குள்ள ரொமப feel ஆயிடுச்சு. அதான் வந்தேன். அந்த மாதிரி செஞ்சிருந்தா விட்டிருப்பிங்களா? ”
சிறிய அமைதிக்குப்பிறகு “ஹும்… may be.” என்றான் கண்ணன்.
“எப்படி அப்படியொரு துணிச்சல் வந்துச்சு? ஒரு பொண்ண கடத்திப்போய்… எப்படி..? ”
“துணிச்சல் இல்ல தேவை.”
“What..? தேவையா..? ”
“ஆமா. தேவைதான். எனக்கு இன்னும் கல்யாணமாகல அப்போ தேவைதான.”
“சொல்றனேன்னு தப்பா நெனைக்க வேண்டாம். prostituteகிட்ட போயிருக்கலாமே” என்றாள் கொஞ்சம் தயங்கியபடியே.
சிரித்தபடியே பேசினான் கண்ணன். “Institute, prostitute ஒரே மாதிரி இருக்குல்ல வார்த்த. இதோட etymology தெரியுமா உங்களுக்கு? படிச்சுப்பாருங்க.”
“ … “
“நான், கல்யாணமாகல அப்போ தேவைதான அப்படின்னு சொன்னவுடனே ஏன் கல்யாணமாகலன்னு கேக்காம, prostituteகிட்ட போயிருக்கலாமேன்னு ஏன் கேட்டிங்க..? ”
“ … “
“ஆணுக்கும் பொண்ணுக்கும் கல்யாணம் நடந்த காலம்லாம் எப்பவோ போயாச்சு. இப்பல்லாம் சாதிக்கும் சாதிக்கும், பொண்ணுக்கும் நல்ல வேலைக்கும், பொண்ணுக்கும் நல்ல வீட்டுக்கும், பொண்ணுக்கும் carக்கும் அடஅவ்வளவு எதுக்கு சுருக்கமா பணவசதிக்கும் பொண்ணுங்களுக்கும்தான் தான் கல்யாணம் நடக்குதுன்னு எங்கண்ணன் சொல்லுவாரு.”
“சாதிய விடுங்க அது எங்க தப்பா எனக்கு தெரியல. அதுக்குன்னு ஒரு குறைந்தபட்ச பொருளாதாரப்பாதுகாப்பக்கூட நாங்க எதிர்பாக்கக்கூடாதா? ”
“Helicopterல மலர் தூவுறதும், 365 நாளுக்கு 365 புடவை கேக்குறதும் குறைந்தபட்ச பொருளாதாரப்பாதுகாப்புல வருதுங்களா? ”
“எல்லா பொண்ணுங்களும் அப்படி இருக்கமாட்டாங்க” என்றாள் கொஞ்சம் கடுமையாக.
“இப்படிதாம்மா நான் சொன்ன அந்த பொண்ணுங்கல்லாம், அந்தமாதிரியெல்லாம் கேக்காத பொண்ணுங்க பின்னாடி போய் ஒளிஞ்சுக்கிறாங்க.”
“சரி விடுங்க. வேற என்ன problem உங்களுக்கு..? ”
“ஒரு பெண்ணுடலுக்காக, அதுவும் ஒரு அழகான பெண்ணுடலுக்காக… ஆமா, ஏன் அழகான பெண்ணுடல்ன்னு கேள்வி வரலயா ரஞ்சனி..? ” ஏன் என்பதுபோல ரஞ்சனி பார்த்தாள்.
“Cinimaல, நாடகத்துல, social mediaல, அவ்வளவு ஏன் விளம்பரத்துல எங்காவது அழகில்லாத பொண்ணுங்கள பாத்திருக்கீங்களா? இருக்கமாட்டாங்க. ஒரு சராசரி ஆணோட கவனம் எங்கெல்லாம் குவியுமோ அங்கெல்லாம் அழகான பொண்ணுங்கள மட்டும்தான் நெறச்சு வச்சிருக்கு இந்த சமூகம். So பொண்ணுங்கன்னாலே அழகான பொண்ணுங்கதான்னு நெனச்சு, பாக்குற பொண்ணுங்களயெல்லாம் புடிக்கலன்னு சொல்லிகிட்டு வந்துடுவேன்.”
“That is marketing technique. அதுவுமில்லாம அப்படி இருக்குற பொண்ணுங்கள போட்டாதான் படம் ஓடும். இப்ப trend இதுதான். அத ஏன் இவ்வளவு seriousஆ எடுத்துக்கிறீங்க? ”
“ஒவ்வொரு director வீட்டு வாசல்லையும் போயி இப்ப இருக்குற பசங்க தர்ணா செஞ்சாங்களா ரஞ்சனி? இந்த நடிகைய, இந்த dress போட்டு, இப்படி காட்டுனாத்தான் உன் படத்த பாப்பேன்னு. அவனுங்க பணவெறி பிடிச்சு செய்ற அயோக்கியத்தனத்துக்கு அவனுங்களே வச்ச பேருதாங்க Marketing technique, Trend எல்லாம்.”
“சரி அப்படின்னே வச்சுப்போம். ஆனா, எல்லாரும் உங்கள மாதிரி செய்யத்துணியலயே? எல்லாருக்கும் இப்படி எண்ணம் வரலயே? ”
“உண்மதான், துணியலங்கிறது உண்மதான். ஆனா, எண்ணம் வரலன்னு நீங்க சொல்லமுடியது ரஞ்சனி. ஏன் prostituteகிட்ட போகலன்னு கேட்டிங்களே இதுதான் காரணம். துணிச்சலில்ல. ஒரு பொண்ண கடத்திட்டுவர்ற அளவுக்கு துணிச்சல் இருக்குற எனக்கு prostituteகிட்ட போகுற துணிச்சல, சுதந்திரத்த சமூகம் தரல. சரி சுயஇன்பம் செஞ்சே காலத்த ஓட்டிக்கலாம்னாலும் ஒரு தாத்தா TVல வந்து இந்த பேரனுங்கமேல காட்டுற பாசத்துல பயமா இருக்கு. எல்லா வழியையும் அடச்சா அழுத்தம் அதிகமாகி வெடிக்கதாங்க செய்யும். ஆனா thanks ranjani.”
“Thanksஆ எதுக்கு..? ”
“என்னோட பிறப்புறுப்ப நானே வெட்டி எறியனுங்கிற எண்ணமெல்லாம் உள்ளுக்குள்ள இருக்கும். ஆனா, துணிச்சல் வராது.” கண்ணன் பேசியதைக்கேட்டபடியே ரஞ்சனி கீழே குணிந்தவாறு உட்கார்ந்திருந்தாள்.
“ஆனா இங்க என்ன வேடிக்கை தெரியுமா ரஞ்சனி ”
“என்ன..? ”
“ஒரு வெசச்செடில வர்ற காய சாப்பிட்டு ஒருத்தனுக்குள்ள வெசமேறிக்கெடக்குறான். அடிக்கடி இப்படி எவனாவது செஞ்சிக்கிறான். ஊர்ல எல்லாரும் அவன் கத்துறது தொல்லையா இருக்குன்னு அவன புடிச்சு சாகடிச்சிடுறாங்க. ஆனா யாருமே அந்த செடிய புடுங்கி எறிய முயற்சி எடுக்கமாட்டேங்குறாங்க. பதிலா அந்த செடிக்கு தண்ணி ஊத்தி வளத்திட்டு இருக்காங்க. நான் குற்றம் செஞ்சேன். நான் குற்றவாளி. சரி என்னைய தண்டிச்சிட்டீங்க. ஆனா, இந்த சமூகத்துல அந்த குற்றம் அப்படியே தான இருக்குது? பாலியல் வறட்சினால நான் அப்படி நடந்துகிட்டேன். ஊர்ல இந்த பிரச்சனைல இருக்குற எல்லா ஆட்களுக்கும் இதுல தீர்வு கெடச்சுடுச்சா? மறுபடியும் படம், நாடகம், social media, cell phone, internetங்கிற செடிக்கு நீங்க தண்ணி ஊத்திட்டு தான இருக்கிங்க.”
“அதுக்காக இதையெல்லாம் use பண்ணவே கூடாதுன்னு சொல்றீங்களா என்ன? ”
“அப்படி சொன்னா என்னையவிட முட்டாள் யாரும் இருக்கமாட்டாங்க. ஆனா இதுவழியால்லாம் ஒரு பொண்ண எங்கள மாதிரி ஆளுங்களுக்குள்ள ஒரு போதைப்பொருளா காட்டுறத நிறுத்தலாமே. ஒரு உளவியல் சிதைப்ப ஒரு ஆணுக்குள்ள நடத்திட்டு இருக்காங்க. இது இங்க யாருக்குமே தெரியலையா? எல்லாத்துக்கும் மேல காமம் பேசுபொருளா ஆகனுங்க ரஞ்சனி. என்னைய விடுங்க எனக்கு பிறப்புறுப்பு நீக்கப்பட்டுட்டதால தணிச்சுக்க வழி இல்லாம இனி கொஞ்சம் கொஞ்சமா காம உணர்வு இல்லாம போய்டும். ஆனா, பொண்ணுங்கள நெனச்சுப்பாருங்க. முதிர்கண்ணிகளோட நிலைமைய நெனச்சுப்பாருங்க. அவுங்க யாருகிட்ட போய் பேசுவாங்க? ”
“உண்மைதாங்க கண்ணன். நானும் call boy பத்தி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா எத்தனை பேரால இத use பண்ணமுடியும்னு தெரியல. ஒரு ஆம்பள நீங்களே call girlல use பண்ண தைரியம் இல்லங்கிறிங்க.”
“இன்னொன்னு கவனிச்சிங்களா ரஞ்சனி? பாலியல் வறட்சியினால காமம் தலைக்கேறிப்போய் கொடுமையா தப்பு செய்றவன புடிச்சு jailல வச்சிருந்து அவன encounterல சுட்டுடுறாங்க. மக்கள் ஆதரவோட. காரணம் கேட்டா அவன் வெளிய வந்தாலும் இதே மாதிரிதான் செய்வான்னு சொல்றாங்க. வேடிக்கையா இல்ல..? ”
“இதுல என்ன வேடிக்கை இருக்கு உண்மைதான அது. இன்னும் என்னைய கேட்டா அதுதான் ஒரு வகைல சரி.”
“என்னங்க சரி. இத்தன பெரிய medical departmentஅ இத்தன பெரிய psycology departmentஅ கைல வச்சிருக்குற government அவன் மனச மாத்த முடியாதுன்னு தோல்விய ஒத்துக்க முடியாததுக்கு அவன சுட்டு ஈடு செய்றதா? இது சரியா? இது அரசியல்ங்க. அவன் மனநோய் புடிச்சவன் அவனுக்கு தர்ற மருந்தோ, தீர்வோ இது இல்ல. அதுக்காக அரசாங்கத்த கூட்டிக்குடுக்க சொல்றியான்னு கேக்காதீங்க. ஊத்திக்குடுக்குறதுக்கு இது பரவாயில்லன்னு நெனைக்கிறேன் ”
ரஞ்சனி நிறைய யோசித்தவளாக சிறுது நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தாள் எதுவும் பேசாமல். ராகுல் கதவைத்திறந்தபடி “ரஞ்சனி போலாமா? ” என்றான்.
ரஞ்சனி எழுந்து கண்ணனின் படுக்கை நோக்கி நடந்தாள். கண்ணனின் கையைப்பிடித்து தன் இரு கைகளுக்குள் வைத்துக்கொண்டு “I am very sorry கண்ணன்” என்றபடி கண்ணனின் கைக்கு ஒரு முத்தம் கொடுத்தள். ராகுல் கதவை சாத்திவிட்டு மீண்டும் வெளியே போய்விட்டான். “ ரொம்ப thanksங்க. இப்படி பேச ஆளில்லாத தனிமையும் விரக்தியும்தான் என்னைய அப்படி யோசிக்க வச்சிடுச்சு. என்னையும் மதிச்சு இவ்வளவு நேரம் பேசுனதுக்கு thanks.” என்றான் கண்ணன். ரஞ்சனி எதுவும் பேசவில்லை. ரஞ்சனி அறைக்கதவை நோக்கி நடந்தாள். அவள் இடது கண்ணிலிருந்து முதல் துளி கண்ணீர் வந்தது. அழுதபடியே வெளியே போனாள். கண்ணன் மீண்டும் stress ballஐ அழுத்தத்தொடங்கினான். வெளியே கண்ணனின் அம்மாவிடம். உங்க பையனுக்கு ஒன்னும் ஆகாது என்றபடி மருத்துவமனையிலிருந்து கிளம்பினாள் ரஞ்சனி. ராகுலைத்தேடிப்பார்த்தாள் அவன் அங்கு இல்லை. ரஞ்சனி கேட்டுக்கொண்டதால் வலிமையான வழக்குகளில் எந்த வழக்கும் பதியப்படவில்லை. இரண்டாண்டு சிறைத்தண்டனை முடியும்வரை மாதாமாதம் கண்ணனின் அம்மாவோடு கண்ணனைப்பார்த்து வந்தாள் ரஞ்சனி. கண்ணனிடம் நிறைய பேசும் ஒரு அன்புத்தோழியாக ரஞ்சனி அவன் வாழ்வில் தொடர்ந்தாள்.


பேசவிடு பேசிவிடு


பேரன்புகள்

மின்னூலாக பதிவிறக்க...
https://drive.google.com/file/d/1C5PWOje7x6SfIH2gBEboMzgriaay9w7j/view?usp=drivesdk

கருத்துகள்


  1. உண்மைதான்
    தேவைக்கு
    மிஞ்சிய
    கெளரவத்தை
    எதிர்பார்ப்பதால்தான்
    எல்லோருக்கும்
    எல்லாமும்
    தள்ளிப்போகிறது(இதில்
    சுற்றத்தார் ; அக்கம்பக்கத்தார் என எப்போதுமில்லாத அக்கறை பீறிட்டெழும்.உன் அழகென்ன ; அந்தஸ்து என்ன என்பது போன்ற பீடிகையோடு)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யட்சி - யட்சன்

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை? - பரிதி

தமிழ்த்திருமணம் - மின்னூல் & முழு ஒலித்தொகுப்பு