சிறுகதை - ஆறறிவும் ஆறு கால்களும் - பரிதி வருங்கால உழவன்
ஆறறிவும் ஆறு கால்களும்
“என் இனிய பொன் நிலாவே, பொன் நிலவில் என் கனாவே…”
நேரம் இரவு 8:30 மணியைக்கடந்துகொண்டிருந்தது.
அம்மா வீட்டின் எல்லா விளக்குகளையும் அணைத்துக்கொண்டிருந்தாள். இராமலிங்கத்தின் அறையில்
மட்டும் படிக்கும் மேசையில் இருக்கும் விளக்கு எறிந்துகொண்டிருந்தது.
“டேய் ராமு… சீக்கிரமா படு…”
என்று கத்தியவளுக்கு
“சரிம்மா…” என்று பதிலளித்தான்.
“சவுண்ட கொறச்சுவை. இந்த பாட்ட
அப்படித்தான்டா கேக்கனும். காலைல பூராவும் ஊறச்சுத்தவேண்டியது. ராத்திரி உக்காந்து
எழுதிகிட்டு கெடக்கவேண்டியது” என்று புலம்பியபடியே அவள் படுக்கச்சென்றாள்.
ராமு பதினோறாம் வகுப்பிலிருந்து
பன்னிரெண்டாம் வகுப்புக்கு செல்கிறான். முழுஆண்டுத்தேர்வு விடுமுறை விடப்பட்டிருந்தது.
காலை 7 மணியிலிருந்து 9 மணிவரை துணை வகுப்புக்கு
போனால் போதும். பள்ளி திறக்க எப்படியும் இன்னும் முழுமையாக ஒரு மாதம் இருக்கிறது. விடுமுறை
தொடங்கிய முதல்நாள் இரவில்தான் ராமு எதையோ தீவிரமாக யோசித்து யோசித்து எழுதிக்கொண்டிருந்தான்.
இடையிடையே விட்டத்தைப்பார்த்து மெல்லமாக சிரித்தபடியும் எழுதிக்கொண்டிருந்தான். அந்த
மொத்த அறையிலும் இருள் சூழ்ந்து, அவனிருந்த இடத்தில் மட்டும் வெளிச்சம் இருந்தது.
“ராமு இன்னும் தூங்கலையா? ”
என்று கேட்ட குரல் நிச்சயமாக அம்மாவின் குரல் இல்லை என்பது அவன் மூளைக்குச்சென்றவுடன்
அவனுக்கு பயம் தொற்றி வியர்கத்தொடங்கியிருந்தது. பாடலை நிறுத்தினான். பயத்தோடு ஒருமுறை
உட்கார்ந்த இடத்திலிருந்தே அறை முழுவதும் திரும்பிப்பார்த்துவிட்டு எழுந்துபோய் அறையின்
விளக்கைப்போட்டான். அறையில் யாருமே இல்லை. “யார தேடுற? ” என்று மறுபடி அதே குரல் கேட்டபோது
அறையைவிட்டு வெளியே ஓடிவிட்டான். ஒருமணிநேரம் அறைக்கு வெளியே இருந்து அறையின் திரைச்சீலையைப்பார்த்தபடியே
நின்றிருந்தான். அவனுக்குத்தெரியும் பேய் வந்தால் திரைச்சீலை ஆடும் என்று தொடர்ந்து
வந்துகொண்டே இருக்கும் அந்த “மாஸ்டர்”ன் படங்களில் சொல்லிக்கொடுத்து இருக்கிறார். ஆனால்,
அப்படி எந்த அசைவும் இல்லை இதுவரை. இப்போது அதே கேள்வி அவன் காதுக்குப்பக்கத்திலிருந்து
கேட்டது “யார தேடுற? ”…
இரண்டு எட்டில் அறைக்குச்சென்று
கதவை சாத்திக்கொண்டான். அறையை ஒருமுறை கண்களை உருட்டியபடி நோட்டம் விட்டான். எதுவும்
தெரியவில்லை.
“நானும் பாத்துகிட்டே இருக்கேன்.
ரொம்ப ஓவரா பயப்படுற. நான் உன் தோள்மேலதான் இருக்கேன் இறக்கிவிடு” என்று அந்த குரல்
சொன்ன இடத்தில் பார்த்தான், ஒரு எறும்பு இருந்தது. சட்டென தட்டிவிட்டான். அது தரையில்
விழுந்தது.
“மனுசனாடா நீயெல்லாம்..? எறும்புதான
நானு..? உன்னைய கொல்லவா போறேன்..? இப்படி தள்ளிவுடுற..? ” என்ற எறும்பைப்பார்த்து
“நீயா பேசுறது..? ” என்றான் பயம்கலந்த ஆச்சர்யத்தோடு.
“ஆமா, மொதல்ல என்னைய டேபிள்ல
எடுத்துவிடு. நான் நடந்து வந்தா ரொம்ப நேரமாகும்.” என்றது சலிப்போடு எறும்பு.
திகைப்பு அடங்காத ராமு அதை டேபிளில்
விட்டுவிட்டு உற்று பார்த்துக்கொண்டிருந்தான். எறும்பும் அவனை உற்றுப்பார்த்தபடியே
“ஏன்டா இதுக்குமுன்னாடி எறும்ப பாத்ததே இல்லையா..? ” என்றது நக்கல்லாக.
“நீ பேசுற..? எப்படி..? ”
“எப்படியோ… விடு. கேக்கவேண்டிய
எடத்துல கேக்காதிங்க.” என்று எறும்பு தனக்குள் முனுமுனுத்தபடியே “அப்புறம்… என்னா பண்ணிகிட்டு
இருக்க..? ” என்றது எறும்பு.
“எழுதிகிட்டு இருக்கேன்” என்றான்
சற்று ஆச்சர்யம் குறைந்தவனாக.
“அது தெரியுது. என்ன எழுதிகிட்டு
இருக்க..? ”
“லெட்டர்” என்றான் வெட்கம் கலந்த
சிரிப்போடு.
“புரியுது… புரியுது…”
என்ற எறும்பு அறையை சுற்றிச்சுற்றிப் பார்த்தது.
“என்ன பாக்குற..? ”
“இல்ல… இங்கதான் என் தாத்தா
வீடு இருந்தது. அத இடிச்சிட்டுதான் நீங்க வீடு கட்டியிருக்கீங்க..? ”
ராமு என்ன சொல்வதெனத்தெரியாமலும்
ஏதோ ஒருவித அச்சத்தோடும் விழித்தான். எறும்பு அவனை கவனித்தது. “என்ன… முழிக்கிற? நான்
பழிவாங்க வந்திருக்குறனோன்னு முழிக்கிறயா? படத்த படமா பாருங்கடா பைத்தியங்களா…” என்று
திட்டியது. ராமு “சரியான ரௌடி எறும்பா இருக்கும்போல…” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.
“ஆமா உன்னோட பேரு என்ன..? ”
என்றான் ராமு.
“பேரு வச்சு பெரும பீத்திக்கிறதெல்லாம்
உங்க பழக்கம். வேணும்னா நீயே ஏதாவது பேரு வச்சு கூப்பிட்டுக்க.”
“உனக்கு ஏதாவது ஆகனும்னு ஆசை
இருக்கா? ”
“ஏதாவதுன்னா? ”
“என்னைய கேட்டா டாக்டர் ஆகனும்னு
சொல்லுவேன். அதுமாதிரி.”
“படிச்ச முட்டளுங்கடா நீங்க.
அப்படியெல்லாம் எதுவுமில்ல எனக்கு. சரி அத எதுக்கு கேக்குற? ”
“இல்ல நாங்க அத பட்டப்பேரா வச்சு
கூப்பிட்டுக்குவோம். என்னைய டாக்டர்னு எல்லாரும் கூப்புடுவாங்க. அதான் கேட்டேன்.”
“ஓ…அப்படியா. அதுசரி அப்டிக்கூப்ட்டா
அது மாதிரியே ஆயிடுவமா..? ”
“அதெல்லாந்தெரியாது”
“சரி எனக்கு கட்டெறும்பு இல்லாட்டி
செவப்பெறும்புன்னு வச்சிடு”
“ஏன்..? ”
“அப்பதான் பயந்துகிட்டு தட்டிவுட்டுடுவீங்க.
அடிக்கமாட்டிங்க. இல்லாட்டி நசுக்கி உங்க மொத்த வீரத்தையும் காட்டிடுவீங்க.”
“ஆமா… உன்னைய ஏன் சாமி எறும்புன்னு
சொல்றாங்க..? ”
“கடிச்சிருந்தாத்தான் பேயெறும்புன்னு
வச்சிருப்பீங்களே.” என்று சொன்னதும் இருவரும் சிரித்தனர்.
“ஆமா, நீங்கதான் கண்ட எடத்துலயும்
வந்துடுறீங்க. காதுக்குள்ளயெல்லாம் போனா சும்மாவா இருக்கீங்க..? ” என்றான் ராமு.
“பிஸ்கட் வச்சிருக்கியா..?
” என்றது எறும்பு.
“ம்ம்… இருக்கு. இந்தா.”
“கொஞ்சத்த அப்படி கீழ போடு”
என்று எறும்பு சொன்னதும் போட்டான். கொஞ்ச நேரம் இருவரும் அதையே பார்த்துக்கொண்டிருந்தனர்.
சிறிதுநேரத்தில் அங்கு ஒரு எறும்பு வந்தது. அந்த பிஸ்கட்டை மோப்பம் பிடித்துக்கொண்டு
போய் தன் கூட்டத்தை கூட்டிவந்தது.
இந்த எறும்பு ராமுவைப்பார்த்து
“மொதல்ல நீங்க சுத்தமா இருங்கடா. எங்கள குத்தஞ்சொல்றாராம். அது எங்க வேல.” என்றதும்
ராமு எதுவும் பேசவில்லை. “அப்புறம்… இனிமேல் இந்த பிஸ்கட்டு, முறுக்கு இந்த மாதிரி
திடமான பொருளெல்லாம் கீழ விழுந்துட்டா கால வச்சு கொஞ்சம் நசுக்கிவிட்டுடு. நாங்க எடுத்துட்டு
போக ஈசியா இருக்கும். அப்புறம்… அந்த எடத்த சுத்தம் பண்றதுக்காக எங்களுக்கு கெடைக்கிற
கூலிதான் அது. எங்களுக்கு ஏதோ சோறு போட்டுட்டதா ரொம்ப பெருமையா பீல் பண்ணக்கூடாது சரியா.”
என்று எறும்பு சொன்னதும் ராமுவுக்கு ஓங்கி அறைந்தாற்போல இருந்தது. ராமு எதுவும் பேசவில்லை.
ஆனால், எறும்பை எப்படியாவது மடக்கவேண்டும் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.
“நான் உங்கிட்ட ஒன்னு கேக்கனும்…”
என்றான் ராமு.
“ம்ம்… கேளு கேளு”
“நான் உனக்கு எவ்வளவு பெருசா
தெரியுறேன்..? யானை உனக்கு எவ்வளவு பெருசா தெரியும்..? ” என்றான் உன்னவிட நான் பெரியவனென்று
காட்டி அற்ப பெருமையடைய.
“அதெல்லாம் நாங்க சாப்புடனும்னு
முடிவுபண்ணிட்டா எங்க வாயவிட சின்னதாத்தான் தெரியும்” என்று எறும்பு மிகவும் சாதாரணமாக
சொன்னதும் ராமு வாயடைத்துப்போய்விட்டான். அவமானமாக உணர்ந்தான். “அதுசரி… நடக்கும்போது
பாத்து நடக்கமாட்டிங்களோ நீங்க..? பூனையோ நாயோ எங்கள மிதிச்சிட்டு நடக்குறத பாத்திருக்கியா..?
” என்றதற்கு ராமுவிடம் பதிலில்லை.
“சரி உங்க வீட்டுல எல்லாம் என்ன
பண்றாங்க..? ” என்றான் ராமு.
“எங்க வீட்டுல எல்லாம் என்ன
பண்றாங்க, உங்க வீட்ட சுத்தம் பண்றாங்க.” என்றவுடன் ராமுவுக்கு எறும்பை மடக்க ஒரு விசயம்
கிடைத்ததாக மகிழ்ந்தான். “ நீதான் சொன்ன… எடத்த சுத்தம் பண்றதுக்காக உங்களுக்கு கெடைக்கிற
கூலியாதான் நாங்க உங்க வீட்டு பொருள சாப்புடுறதா. ஆனா சக்கர டப்பாவுல உங்க ஆளுங்க என்ன
பண்றாங்க..? ” என்றான்.
“ம்ம்… அந்த கருமத்த நீங்க சாப்புட்டு
சீக்கிரம் செத்துடக்கூடாதுன்னுதான் நாங்க காலி பண்றோம்.” என்றது எளிமையாக, நக்கலாக.
எறும்பை முறைத்தபடியே மீண்டும் எழுத தொடங்கிவிட்டான். திடீரென எழுதுவதை சட்டென நிறுத்தி
“உங்களுக்கு வேறென்ன பிரச்சன இருக்கு..? ” என்றான்.
“இலையெல்லாம் வெட்டி வீட்டுக்குள்ளயே
விவசாயமெல்லாம் பாத்து வாழ்ந்தவங்க நாங்க. நாங்க சாப்பிடுற வகை மரத்தையெல்லாம் வெட்டிட்டு
வீடு கட்டிட்டீங்க. இப்போ நாங்க வசதியா வாழ்ந்த எடத்துலயே கீழ செதறி விழுறத சாப்புடுற
அளவுக்கு செஞ்சிட்டிங்க. ஊரானுக்கு உங்க ஊர குடுத்துட்டு நீங்க வாட்ச்மேனா இருக்கீங்களே
அதுமாதிரி. அப்புறம் செதறி விழுறதயும் சாப்பிட வரக்கூடாதுன்னு மருந்து வச்சுவேற கொல்லுவீங்க.
எங்க தாத்தா சொல்வாரு மனுசனுங்கதான் இந்த உலகத்தோட மொதல் பிரச்சனையும் கடைசி பிரச்சனையும்
அப்படின்னு. மனுசனுங்களும் கொஞ்ச வருசத்துக்கு முன்னாடியெல்லாம் நல்லாதான் இருந்திங்கலாம்.
இப்பதான் இப்படி ஆகிட்டதா சொல்வாரு”
“அப்படியென்ன நாங்க பண்ணிட்டோம்..?
”
“வாசல்ல மாவுல கோலம் போட்டாங்களாம்.
இப்ப சுண்ணாம்புல போடுறீங்க. அதான் வீட்டுக்குள்ள வந்துட்டோம். எறும்புபொடி போட்டு
கொல்ற அளவுக்கு வந்துட்டு, எதுவுமே செய்யாத மாதிரி பேசுறிங்க..? ஆமா, அதென்ன வீணாப்போச்சு,
சாப்புடுற பொருள் கெட்டுப்போச்சுன்னு சொல்லுற பழக்கம். இதுல இருந்தே தெரியல நீங்க எவ்வளவுபெரிய
சுயநலவாதிங்களாயிட்டிங்கன்னு.”
“புரியல…”
“சோறோ மத்த உயிர்ப்பொருளோ கெட்டுப்போறதில்ல
அடுத்த நிலைல இருக்குற உயிருக்கு உணவாயிடும். நீ சோற பொங்கி வச்சதும் அந்த பாக்டீரியா
அத சாப்புட்டுடுதா? இல்லைல்ல..? நீ இனி சாப்பிடமாட்டபோலங்குற அளவு நேரங்கழிச்சுதான
அது எடுத்துக்குது. ஆனா நீ, உன்னோட பார்வைல இருந்து அது கெட்டுப்போச்சுங்குற. டேய்…
எப்டிடா ஒரு பொருள் கெட்டுப்போகும்..? சொல்லு..? நீயே செத்தாலும் உன்னோட ஒடம்பு ஒன்னும்
கெட்டுப்போகாது அது இன்னொரு உயிருக்கு உணவாயிடும் அவ்வளவுதான். வந்துடுறது பெருசா…
பகுத்தறிவு, பாயாசம்னுகிட்டு. என்ன ஒலகத்துலயே நீங்கமட்டுந்தான் இருக்கிங்களா..? சரிசரி
பேரு வச்சிட்டியா..? ” என்றது சலிப்பும் நக்கலும் சேர்ந்தாற்போல.
“வச்சிட்டேன்”
“என்ன பேரு..? ”
“திருவள்ளுவர். இது எங்க தாத்தா
பேரு.”
“ஏன் இந்த பேர வச்ச..? ”
“இவ்வளவு சின்னதா இருந்துகிட்டு
இவ்ளோ பெருசா பேசுறியே அதான்.” என்றான் கொஞ்சம் தயக்கத்தோடும், குற்றவுணர்ச்சியோடும்.
“சரி சரி நாளைக்கு என்னைய எங்காவது
வழியில எங்காளுங்களோட பாக்கும்போது என்னைய இப்படி நீ வைக்கிற பேர வச்சு கூப்பிட்டுடாத.
மனுசங்களோட சகவாசம் வச்சிருக்கியான்னு எங்காளுங்க திட்டுவாங்க. நீங்க அசிங்கம் பண்ணுற
உலகத்தத்தான் நாங்கல்லாம் சுத்தம் பண்ணிட்டு இருக்கோம். மறந்துடாத. போற போக்கப்பாத்தா
உலகத்த சீக்கிறமா அழிச்சுடுவிங்க போலத்தெரியுது. ஏதோ உங்களுக்கு முன்னாடி பத்து பன்னன்டு
கோடி வருசமா இந்த உலகத்துல இருக்குறவங்கங்குற முறைல சொல்றேன். பாத்துக்கங்க. இத சொல்லிட்டு
போலாம்னுதான் வந்தேன்.” என்று எறும்பு சொன்ன போது சாகக்கிடக்கும் தாத்தா அவனுக்கு அறிவுரையும்,
வாழ்த்தும் சொல்லி “இந்த வீட்ட பத்திரமா பாத்துக்க” என்று சொல்வதுபோல இருந்தது. எதுவும்
பேசவில்லை அமைதியாக இருந்தான் ராமு.
“லவ் லெட்டர் தான… அது..? ”
என்றது எறும்பு சிறியதாய் சிரித்தபடி. “ஆமாம்” என்பதுபோல வறட்டு புன்னகையோடு தலையசைத்து,
சிரித்தான் ராமு.
“அத கெட்டியா புடிச்சிக்கங்க.
விட்டுடாதிங்க. காதலால மட்டுந்தான் இந்த உலகத்துல ஒரு பூவ பூக்கவைக்க முடியும். ஒரு
விதைய மொளைக்க வச்சு, அத மரமாக்கி பழமா பசியாத்தவும், நெழலா இளைப்பாறவும் செய்ய முடியும்.
ஒரு தேனிய, ஒரு பட்டாம்பூச்சிய, ஒரு குருவிய இந்த உலகத்துல உசுரோட வச்சிருக்கமுடியும்.
அட அவுங்கெல்லாம் நம்மாளுகதாம்பா.” என்ற எறும்பு “ஐயயோ, நான் நம்மாளுகன்னு சொன்னதுக்கு
மனுசனுங்ககிட்ட வேற அர்த்தம் இருக்குதுல. இதுக்கு தான் மனுசனுங்ககூட சகவாசமான்னு திட்டுவாங்க
எங்காளுங்கன்னு சொன்னேன். சலூன் கடைல ஒன்னா கெடக்குற மசுறுமாதிரி, செத்தா நீயும் நானுமே
ஒரே உசுருதான். உங்க வீட்டுல இத்தன நாளா சுத்திகிட்டு இருக்குற கரப்பாம்பூச்சி, கொசு,
ஈ, எலி, செலந்தி, பல்லி அப்புறம் எங்களயெல்லாம்
சாதி பாத்தா உள்ள விட்டிங்க. அத விடுடா உங்ககிட்ட கேட்டுட்டா உங்க வீட்டுக்குள்ள நாங்க
எல்லாரும் வந்தோம். இவ்வளவுதான்டா உலகத்துல உங்களுக்கு இருக்குற அதிகாரம். சரி நான் கெளம்புறேன்.” என்று நக்கலாக சிரித்துக்கொண்டே
சுவற்றில் ஏறிச்சென்ற எறும்பு நின்று திரும்பி “அப்புறம்… நான் சொன்னதெல்லாம் மறந்துடாத.
நீ வச்ச பேரு புடிச்சிருக்கு. எங்க பரம்பர ஆட்களெல்லாம் அவர பாத்திருக்காங்க.” என்று
சொல்லிச்சென்றது.
ராமு சிறிதுநேரம் எதையோ யோசித்தவன்போல
உட்கார்ந்திருந்தான். பின் கடிதத்தை எழுதத்தொடங்கினான். மணி ஒன்றைக்கடந்திருந்தது கடிதத்தை
எழுதி முடித்திருந்தபோது இரண்டேகால் மணி. போய்ப்படுத்தான். சிறிதுநேரத்தில் தூங்கினான்.
காலை துணை வகுப்புக்கு நேரமாகிவிட்ட
அவசரத்தில் வேகவேகமாக கிளம்பினான். அம்மா வீட்டின் உள்ளறையிலிருந்து சமையலறைக்குள்
வந்தவள் “டேய், இங்க என்னடா பண்ணிகிட்டு இருக்க..? ட்யூஷன் போகலையா..? ” என்றாள். இராமலிங்கம்
சமையலறையை சுத்தம் செய்துகொண்டு இருந்தான் முதுகில் புத்தகப்பையை மாட்டியபடியே. அப்பா
நேற்று இரவுப்பணிக்கு கிளம்பும்போதே அம்மா “ஏங்க… நாளைக்கு வரும்போது கடைல எறும்புப்பொடி
வாங்கிட்டு வந்துடுங்க. இந்த எறும்புங்க தொல்ல தாங்கமுடியல” என்று சொல்லிவிட்டிருந்தாள்.
அம்மா திட்டியபடியே அவன் கையிலிருந்த துணியை வாங்கி அனுப்பிவைத்தாள். போகும்போது “இன்னைக்கு
ஒருநாள் பாக்கலாம்மா சுத்தம்பண்ணிட்டேன் எறும்பு எதுவும் வரலைன்னா விட்டுடு பொடியெல்லாம்
போடாதம்மா” என்றான். “சரி சரி போ…” என்றாள்.
அப்போதும் அவன் நிதானமாகவே சென்றான்.
ஒன்பது மணிக்கு அவன் காதலி வகுப்பு முடிந்து வரும்போது அங்கு போனால் போதும் என்பதைப்போல
சட்டைப்பையில் இருக்கும் பேரன்பின் கடிதத்தோடு.
(நீங்கள் நினைப்பதுபோலவே ராமலிங்கத்தின்
அப்பா ஒரு இரவுக்காவலாளி தான். ஒருகாலத்தில் மீசை மயிரை தூக்கிவிட்டுக்கொண்டு சுத்திய
சனத்தின் மகனேதான்)
. . . பேரன்புகள்
. . .

அருமையான பதிவு 😍😍😍
பதிலளிநீக்கு😍😍😍
நீக்குஅருமையான சிறுகதை...
பதிலளிநீக்குநன்றி!
நீக்கு